சென்னை: செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத கருமுட்டை விற்பனையை தடுக்க மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல் படியும், ஏஆர்டி சட்டம் 2021ன் படியும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கி, கரு முட்டையை கருப்பையில் செலுத்தும் மையம் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என 4 வகை மருத்துவ மையங்கள் பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு வழிகாட்டுதல்படி கருத்தரிப்பு மையங்களை உடனே பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி கரு முட்டை சேமிப்பு வங்கிக்கு ரூ. 50 ஆயிரம், கருப்பையில் செலுத்தும் லெவல் 1 தரத்தில் இருக்கும் மையத்திற்கு ரூ.50 ஆயிரம், தியேட்டருடன் கூடிய கருத்தரிப்பு மையத்திற்கு ரூ.2 லட்சம், பிரசவம் வரை சிகிச்சையளிக்கும் தியேட்டருடன் கூடிய வாடகைத் தாய் மையத்திற்கு ரூ.2 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதிக்குள் பதிவு கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.