சொந்த ஊருக்கு வருவது போன்ற மகிழ்ச்சி : நாகார்ஜூனா நெகிழ்ச்சி

பிரவீன் இயக்கத்தில் நாகார்ஜூனா, சோனல் சவுகான் நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள படம் ‛தி கோஸ்ட'. இதை தமிழில் ரட்சன் – தி கோஸ்ட் என்ற பெயரில் வெளியிடுகின்றனர். இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார் நாகார்ஜூனா. அவர் கூறுகையில், ‛‛நானும் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஐதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, சொந்த ஊருக்கு திரும்ப வரும் சந்தோஷம் கிடைக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரியில் தான் படித்தேன். சென்னையில் எல்லா இடங்களும் எனக்கு பரிச்சயம் தான்.

மணிரத்னம் சாரை மணி என்று தான் அழைப்பேன். பொன்னியின் செல்வன் – 1 படத்திற்காக மணிக்கு வாழ்த்துகள். பொன்னியின் செல்வன் மிக பெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தில் நடித்த விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என் தம்பி கார்த்திக்கு வாழ்த்துக்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

நான் தமிழில் ரட்சகன் படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி படத்தின் மூலம் பிரபலமடைந்தேன். அவருடன் கீதாஞ்சலி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை மறக்க முடியாது. உதயம் படத்தில் மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பிறகு, ரட்சகன் படமும் வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான தோழா படமும் வெற்றியடைந்தது. அதேபோல் பயணம் படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

முதலில் இரட்சன் படத்தை தமிழில் வெளியிட யோசனை இல்லை. பிற மொழிகளில் வெளியிட வேண்டும் என்று யோசித்தபோது, தமிழில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு தமிழில் மொழிபெயர்த்து கொடுத்த அசோக்கிற்கு நன்றி. தமிழில் நான் தான் டப்பிங் பேசி இருக்கிறேன். தமிழ் உச்சரிப்பிற்கு உதவிகரமாக இருந்தார். இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகிறது. கொரோனாவிற்குப் பிறகு சமீபகாலமாகத்தான் மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள்.

மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும் இயக்குநர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் இயக்குநர் பிரவீன். இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனத்தை பிரவீனும், சண்டைக் காட்சிகளை தினேஷும் சொல்லிக் கொடுத்தார்கள். நிச்சயம் அது புதுமையான ஒரு அனுபவத்தை தரும்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.