ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை இயக்குநர் ஹேமந்த் லோஹியாவை, அவரது வீட்டு வேலையாள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் லோஹியா, 1992-ஆம் ஆண்டு பேட்ச்-ஐ சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. 57 வயதான இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி உயர்வு பெற்று ஜம்மு காஷ்மீரின் சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை ஜம்முவின் உதயவாலாவில் உள்ள அவரது வீட்டில் மர்மான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து, காவல் துறை கூடுதல் இயக்குநர் முகேஷ் சிங் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை இயக்குநரின் சடலம் மர்மமான சூழ்நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸ் அதிகாரியின் வீட்டு வேலையாள் தலைமறைவாகியிருக்கிறார். அவரைத் தேடும் பணி தொடங்கி உள்ளது. சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் வந்து தடையங்களை சேகரித்து வருகின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர். குற்றப்பின்னணி குறித்து விசாரணை தொடங்கி உள்ளது. மூத்த அதிகாரியான ஹேமந்த் லோஹியாவின் மறைவுக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவித்தார்.
வேலையாள் தலைமறைவு
இந்தக் கொலையை லோஹியாவின் வீட்டில் வேலைபார்த்து வந்த யாசிர் அகமது செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். லோகியாவின் கழுத்தை நெரித்தும் பின்னர் உடைந்த கெட்ச் அப் பாட்டிலால் கழுத்தை அறுத்தும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். லோகியாவின் உடலை எரிக்கவும் முயற்சி நடந்திருக்கிறது.
“கொலை செய்ததாகக் கருதப்படும் 23 வயதான யாசிர் அகமது ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஹேமந்த் லோஹியாவின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். யாசிரின் நடவடிக்கைகள் மூர்க்கமாக இருந்துள்ளன. குற்றம் நடந்த பின்னர் யாசிர் அங்கிருந்து ஓடும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன” என்று காவல்துறை கூடுதல் இயக்குநர் முகேஷ் சிங் தெரிவித்திருந்தார்.
காவல்துறை இயக்குநர் தில்பக் சிங் கூறுகையில், “ஹேமந்த் லோகியா அவரது வீட்டில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், உதய்வாலாவில் உள்ள அவரது நண்பர் சஞ்சீவ் காஜூரியா வீட்டில் தங்கி இருந்தார். திங்கள்கிழமை இரவு உணவுக்குப் பின்னர் அவர் துங்கச் சென்றுள்ளார். அவரது காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், அவரது வீட்டு வேலையாள் யாசிர் அவருக்கு மருந்து போட்டிருக்கிறார். பின்னர் அறைக் கதவை அடைத்து விட்டு கூரான ஆயுதத்தால் லோகியாவை யாசிர் தாக்கி அவரை எரிக்க முயன்றுள்ளார். தீ எரிவதைப் பார்த்து மற்ற காவலர்கள் கதவை உடைத்துக்கொண்டு வந்து அவரை காப்பாற்ற முயன்றனர் அதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது. ஜம்முவில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள ராம்பனுக்கு யாசிரைப் பிடிக்க போலீஸ் படை சென்றுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
குற்றவாளி கைது
இந்தநிலையில் இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் யாசிர் அகமதுவை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
“ஜம்மு காஷ்மீர் போலீசார் இரவு முழுவதும் நடத்திய தேடுதலின் பலனாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்தார்.
டிஜிபி தில்பக் சிங், “வீட்டின் வேலையாள் ஒருவரே இவ்வாறு செயல்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. யாசிர் மனநிலை பாதிக்கப்பட்டு மூர்க்கமான குணத்துடன் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குற்றம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
தீவிரவாத குழு ஒன்று கொலைக்கு பொறுப்பேற்றிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “இதுபோன்ற அமைப்புகள்அனைத்து விஷயங்களுக்கும் இப்படி வெட்கமின்றி உரிமை கோருவது இயல்புதான். தற்போது எங்களிடம் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால் அதனை நாங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அது குறித்தும் விசாரிக்கப்படும்” என்றார்
பொறுப்பேற்பு
முன்னதாக ஜம்முகாஷ்மீர் சிறைத்துறை இயக்குநர் கொலைக்கு அறியப்படாத குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. பீப்புள்ஸ் ஆண்டீ பாசிஸ்ட் ஃப்ரண்ட் (பிஏஎஃப்எஃப்) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அந்த குழு, சமூக ஊடகங்களில் பரப்பியுள்ள குறிப்புகளில், “தங்களது குழுவின் சிறப்பு படை மூலம் லோஹியா கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அவர் ஒரு உயர் இலக்கு. இந்துத்துவா ஆட்சிக்கு உதவி செய்பவர்களை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எங்களால் கொல்ல முடியும் என்பதற்கு இது சாட்சி. இந்த உயர் அதிகாரியின் கொலை ஒரு தொடக்கம் மட்டுமே. பலத்த பாதுகாப்புக்கு இடையில் காஷ்மீர் வந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா-விற்கு எங்களது பரிசு இது. எங்களது நடவடிக்கை தொடரும்” என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இணைய சேவை துண்டிப்பு
மூன்று நாள் பயணமாக உள்துறை அமித் ஷா திங்கள் கிழமை ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார். இந்தநிலையி்ல் ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை இயக்குநர் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அமித் ஷா பங்கேற்கும் பேரணியை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.