மியன்மார் நாட்டில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் அவர்களை வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்கிறார்.
மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்திருந்நது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் எழுதியிருந்தார். விசாரணையில், இவர்கள் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றதாக தெரியவந்துள்ளது.
இப்படி அழைத்து செல்லப்பட்டவர்கள், அங்கு சென்ற பின்னர் ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாக தாக்கப்பட்டனர் என்றும் தெரியவந்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்றும், தூதரகத்துக்கு இப்பிரச்னை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கையால் மியன்மாரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் முதல் கட்டமாக மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் அவர்கள் புறப்பட்டு உள்ளனர். இன்று மாலை சென்னை விமான நிலையத்துக்கு வருகை தர உள்ளனர். அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளார். மீதம் உள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
– எம்.ரமேஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM