தேவர் ஜெயந்தி விழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அதை முன்னிட்டு அதிமுகவில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அவரது மார்பளவு சிலைக்கு அதிமுக சார்பாக தங்க கவசம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அதிமுக பொருளாளர் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் கையெழுத்திட்டு தங்ககவசத்தை பெற்று விழாக்குழுவிடம் வழங்குவார். பின்னர் நிகழ்வு முடிந்த பின்னர் வங்கி லாக்கரில் வைப்பார்.
அதிமுக பிளவுபட்டு ஓபிஎஸ் – இபிஎஸ் அணி உருவான நிலையில் இரு தரப்பும் எங்களுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என கூறிவருகின்றனர்.
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் வகித்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
பொதுக்குழு செல்லாது என நீதிமன்றம் சென்றார் ஓபிஎஸ். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனால் உச்ச நீதீமன்றத்தில் ஓபிஎஸ் மேல் முறையீடு செய்தார். அது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணியினரும் வங்கியில் மனு அளித்துள்ளனர். யாருக்கு வங்கி அதிகாரிகள் அனுமதி கொடுக்க உள்ளனர் என்பது இனிதான் தெரியவரும்.
அணிக்கு சாதகமாக வங்கி அதிகாரிகளின் முடிவு அமைந்தாலும்கூட பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை என்கிறார்கள்.
கடந்த ஆண்டு அதிமுகவில் இரட்டை தலைமை இருந்த போதே எடப்பாடி பழனிசாமி பசும்பொன் நிகழ்விற்கு வருகை தரவில்லை. மனைவி இறந்து ஒரு ஆண்டு பூர்த்தியடையாததால் பன்னீர் செல்வமும் கலந்து கொள்ளவில்லை. சசிகலா மதுரையிலிருந்து தொண்டர்கள் சூழ பசும்பொன் சென்றார்.
சசிகலாவை ஒதுக்கியதற்கே தென் மண்டல அதிமுகவினர் அதிருப்தியடைந்தனர். எனவே கடந்த ஆண்டு ஓபிஎஸ் தேவர் ஜெயந்தி சமயத்தில் தங்க கவசத்தை பெற்றுக் கொடுத்துவிட்டு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது சசிகலா ஆதரவு கருத்தை தெரிவித்தார். சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுக்காமல் தென் மண்டலத்தில் அதுவும் தேவர் ஜெயந்தி சமயத்தில் அரசியல் செய்ய முடியாது என ஓபிஎஸ் கருதினார்.
ஓபிஎஸ் உடன் பயணிக்கும் போதே கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் வருவதை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி, இம்முறையும் வருகை தரமாட்டார் என்கிறார்கள் ஒரு சாரார்.
ஆனால் மற்றொரு தரப்போ வேறொரு வாதத்தை முன்வைக்கிறார்கள். தெற்கில் நமக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கத் தான் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகாசி, விருதுநகர் பகுதிகளுக்கு சென்றார். ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா போன்றோர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்தனர். அதேபோல் தேவர் ஜெயந்தி சமயத்திலும் அவர் தொண்டர்கள் சூழ வருவார் என்கிறார்கள்.