மதுரை மாவட்டம், தோப்பூரில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதையடுத்து, இதன் கட்டுமானப் பணிகள் சுமார் 45 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் பெரிய அளவில் வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி உண்மையாகவே 95 % பணிகள் முடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸை ஆக்டோபர் 5-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதே 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. மேலும் ஜே.பி.நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் எம்.எல்.ஏ-வாக இருந்த பிலாஸ்பூரில்தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிக” எனப் பதிவிட்டிருக்கிறார்.