சென்னை: நவராத்திரி பண்டிகையின் இறுதிநாளான விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளைய தினம், பூஜை நேரம், ஏடு படிக்கும் நேரம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
நமது உள்ளங்கையில் முப்பெருந்தேவியர் வாசம் செய்கின்றனர். விரல் நுனியில் செல்வம் தரும் லட்சுமியும், கையின் நடுப்பகுதியில் கல்வியைத் தரும் சரஸ்வதியும், அடிப்பகுதியில் வீரத்தைத் தரும் பார்வதியும் வாசம் செய்கின்றனர். எனவேதான் நம் முன்னோர்கள், காலையில் எழுந்ததும் நமது உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் எனச் சொல்கின்றனர். இந்த மூன்று தேவிகளையும் வழிபடும் பண்டிகைதான் நவராத்திரி பண்டிகை.
நவராத்திரியின் இறுதிநாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. பண்டிகையில், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவது வழக்கம். இந்த முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் தினம்தான் விஜயதசமி. அன்றைய தினத்தில், எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை.
விஜய என்றால் வெற்றி என்று அர்த்தம். அன்றைய தினத்தில், எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை
கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். வீட்டில் தாத்தா அல்லது தந்தையின் மடியில் குழந்தையை அமரவைத்து அதன் விரல் பிடித்து அரிசி அல்லது நெல்லில் எழுதவேண்டும். முதலில் முழுமுதற்கடவுளான விநாயகர் திருநாமத்தை எழுதுவது விசேஷம். இந்நாளில், குழந்தைகளுக்கு முதன்முதலில் எழுத்து கற்பிக்கும் ‘அட்சரப்யாசம்’ நிகழ்ச்சி விமரிசையாகக் கொண்டாடப்படும். அன்று ஒரு தட்டில் அல்லது தரையில் நெல்மணிகளைப் பரப்பி, அதில் குழந்தைகளின் விரல் பிடித்து அ என்ற முதல் எழுத்தை எழுதச் செய்வர்.
ஓம் ஸ்ரீ கணபதியே நம என்று ஒவ்வொரு அட்சரமாக உச்சரித்துக்கொண்டே குழந்தையையும் சொல்லச் சொல்லி எழுத வேண்டும். பின்பு ஓம் நமசிவாய என்றும், ஓம் நமோ நாராயணாய நம என்றும் எழுத வைக்க வேண்டும். அவரவர்களின் குலதெய்வத்தின் பெயர்களையும் எழுதலாம். பின்பு ‘அ’ என்கிற எழுத்தை எழுத வேண்டும்.
அதுபோல நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது போல தெய்வங்களுக்கு மலரும் நீரும் படைத்து பக்தியோடு உபசரிக்க வேண்டும். பின்பு காய்ச்சிய பசும்பால், கற்கண்டு போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். இதன்பின்பு அட்சராப்யாசம் செய்ய வேண்டும்.
பிறகு நிவேதனம் செய்த பாலையும், கல்கண்டையும் குழந்தைக்குத் தர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முப்பெரும் தேவியரின் பிரசாதம் குழந்தைக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விஜயதசமி பூஜை செய்ய உகந்த நேரம்:
தசமி திதி அக்டோபர் 04 ம் தேதி 2.20 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 5ம் தேதி பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் புது கணக்கு துவங்குபவர்கள் அக்டோபர் 5 ம் தேதி காலை 10.45 மணி முதல் 11.45 வரை பூஜை செய்வது, கணக்கை துவங்கலாம். காலையில் பூஜை செய்ய இயலாதவர்கள் மாலை 4.45 முதல் 5.45 மணிக்குள் பூஜை செய்யலாம்.
மேலும் சரஸ்வதி பூஜை அன்று ஏடு அடுக்கும் நாம், மறுநாள் விஜயதசமி தினத்தில், சரஸ்வதிதேவிக்கு கற்கண்டு கலந்த பால் நைவேத்தியம் செய்து ஏடு பிரிக்கவேண்டும்.
புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் பூஜை செய்து ஏடு பிரிக்கலாம். புதன் கிழமை தசமித் திருநாளில் புரட்டாசி திருவோணமும் சேர்ந்து வருவதால் ஹயக்ரீவருக்கும் உகந்த நாள் இது.
ஆகவே இந்த வருடம் தசமி நாளில், விநாயகர், சரஸ்வதி தேவி, ஹயக்ரீவர் ஆகிய மூவரையும் வழிபட்டு சுபகாரியங்களைத் தொடங்கி வெற்றி பெறுங்கள்.