பண்பலை வானொலி கொள்கை நெறிமுறைகளில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!

தனியார் பண்பலை மூன்றாம் கட்ட கொள்கை வழிகாட்டு நெறிமுறைகள் என்று குறிப்பிடப்படுகின்ற தனியார் முகமைகள் மூலம் பண்பலை வானொலி ஒலிபரப்பு சேவைகள் மூன்றாம் கட்டம் என்பதன் விரிவாக்கம் குறித்த கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சில அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உரிம காலமான 15 ஆண்டுகளில் ஒரே நிர்வாகக் குழுமத்திற்குள் பண்பலை வானொலி அனுமதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான மூன்றாண்டு பரீட்சார்த்த காலத்தை நீக்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், வானொலி தொழில் துறையின் நீண்டகால நிலுவை கோரிக்கையான, அலைவரிசையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு 15 சதவீத தேசிய வரம்பு என்பதை நீக்கவும் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும், பண்பலை வானொலி கொள்கை விதிமுறைகளில் நிதி சார்ந்த தகுதியை எளிமைப்படுத்தும் விதமாக சி மற்றும் டி வகை நகரங்களின் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் ஏலத்தொகை ஏற்கனவே இருந்த ரூ.1.5 கோடி என்பதிலிருந்து ரூ.1 கோடி என குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று திருத்தங்களும் தனியார் பண்பலை வானொலி தொழில் துறை பொருளாதார ரீதியில் முழுமையான உத்வேகத்தைப் பெற உதவும்; நாட்டிலுள்ள மூன்றாம் கட்ட நகரங்களில் பண்பலை வானொலியையும், பொழுதுபோக்கினையும் விரிவுபடுத்த வழி வகுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, வானொலி ஊடகத்தின் மூலம் இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள சாமானியர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எளிதாக வணிகம் செய்தல் என்பதை மேம்படுத்துவதற்காக நிர்வாகத்தை மேலும் திறன் உள்ளதாகவும் பயனுடையதாகவும் மாற்றுவதற்கு தற்போதுள்ள விதிகளை எளிமைப்படுத்துதல் மற்றும் சீர்திருத்தல் என்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் இதன் பயன்கள் சாமானிய மக்களை சென்றடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.