வாடிகன்: உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் கடந்த வாரம் அறிவித்தார். இதற்கிடையில், ரஷ்யப் படைகளால் ஒவ்வொரு நாளும் உக்ரைனியர்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக குற்றம் சுமத்தினார். இந்தச் சூழலில் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைன் போர், மிகவும் தீவிரமானதாகவும், பேரழிவு தரக்கூடியதாகவும், பெரும் கவலையை ஏற்படுத்தும் அளவுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. கடவுளின் பெயராலும், ஒவ்வொரு இதயத்திலும் குடிகொண்டிருக்கும் மனிதாபிமானத்தின் பெயராலும், உடனடி போர் நிறுத்தம் செய்யுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். வன்முறை, மரணத்தை நிறுத்துமாறு ரஷ்ய அதிபரை கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக புதினுக்கு நேரடியாக போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுப்பது இதுவே முதல்முறையாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யா செய்த போர் குற்றங்களை உக்ரைன் அவ்வப்போது வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.