ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பலகோடி மதிப்புள்ள 68 மூட்டை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக, கடந்த நான்கு மாதங்களில் கஞ்சா நெட்வொர்க்கிற்கு எதிரான அதன் நடவடிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 1,700 வங்கிக் கணக்குகளை தமிழ்நாடு காவல்துறை முடக்கியது. மேலும் தென் மண்டலத்தில் மட்டும் 160 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க ஆபரேசன் கஞ்சா 2.0 என்று அறிவித்து டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். ஆனால் அவர் அறிவித்தற்கு எதிர்மாறாகவே சென்னை உள்பட பல பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் காணப்படுகிறது. சென்னையில் உள்ள பெரும்பலான பெட்டிகடைகளில், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரிஅருகே மற்றும் கால்வாய் கரையோரம் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதனால், இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்புக்கு மத்தியஅரசுதான் காரணம், என்று தமிழக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
சமீபத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல, சேலத்தில் கஞ்சா டோர் டெலிவரி செய்யும் அவலங்கள் நடைபெற்ற நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, கோவை உள்பட பல பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் தொண்டி பகுதியில் உள்ள காட்டுக்குள் உள்ள முட்புதர்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் கஞ்சா அடங்கிய 68 பார்சல்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கண்டெடுத்தனர். அந்த மூட்டைகளில் இருந்து 138 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்று கூறிய போலீசார், அந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக, கடந்த நான்கு மாதங்களில் கஞ்சா நெட்வொர்க்கிற்கு எதிரான அதன் நடவடிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 1,700 வங்கிக் கணக்குகளை தமிழ்நாடு காவல்துறை முடக்கியது. மேலும் தென் மண்டலத்தில் மட்டும் 160 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.