அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் தற்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜப்பான் கடற்பகுதியின் மீது கடந்த அக்டோபர் 1ம் தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவி வட கொரியா சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணையை வீசி உள்ளது. இந்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன் ஜப்பானின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோ மீட்டர் உயரத்தில் 20 நிமிடங்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருமா…சீமானுக்கு சிக்கல்; பலே ப்ளான் போடும் பாஜக!
வட கொரியாவின் ஏவுகணை சோதனை ஜப்பானிய மக்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதால் வடக்கு ஜப்பானில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடுமையாக கண்டித்துள்ளதோடு வடகொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை மோசமானது என கூறியுள்ளார்.
அதே சமயம் ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, ஜப்பான் அரசு கூறியுள்ளது. மேலும் வடகொரியாவில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவுகணை வீசப்பட்டால், ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த எதிர்தாக்குதல் நடத்த தயங்காது என்றும், பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வார்னிங்; கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜப்பான் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வடகொரியாவின் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முடிவை கண்டிக்கிறோம்.
இந்த நடவடிக்கை ஸ்திரமின்மை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வட கொரியா செயல்படுவதை அப்பட்டமாக காட்டுகிறது’ என கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் வட கொரியா 5 முறை ஏவுகணை சோதனை நடத்தி உள்ள நிலையில், தற்போது ஜப்பான் மீது ஏவுகணை வீசப்பட்டதை வைத்துப் பார்க்கையில் வடகொரியா எந்த நேரத்திலும் ஜப்பான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பான் வடகொரியா இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.