வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘நாடு முழுதும், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கண் வங்கிகள் செயல்படவில்லை’ என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலர், நாட்டில் உள்ள கண் வங்கிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:
நாடு முழுதும், 320 கண் வங்கிகள் செயல்படுகின்றன. அந்தமான் மற்றும் நிக்கோபர், ஜம்மு – காஷ்மீர் உட்பட எந்த யூனியன் பிரதேசத்திலும் கண் வங்கிகள் செயல்படவில்லை. இவை தவிர, 11 மாநிலங்களிலும் கண் வங்கிகள் செயல்படவில்லை.திரிபுரா, உத்தரகண்ட், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கண் வங்கி மட்டுமே செயல்படுகிறது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 74, உத்தர பிரதேசத்தில் 41, கர்நாடகாவில் 32, குஜராத்தில் 25 கண் வங்கிகள் செயல்படுகின்றன. கொரோனா பாதிப்புக்குப் பின், கண்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற வகையில் கண் வங்கிகளில் இருப்பு இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரபல கண் மருத்துவர் மணீஷ் ஆச்சர்யா கூறுகையில், ”நாட்டில் உள்ள பெரும்பாலான கண் வங்கிகள் பெயரளவுக்கே செயல்படுகின்றன. ”ஒரு சில வங்கிகள் மட்டுமே, போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் இயங்குகின்றன. இந்த விஷயத்தில் மத்திய – மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement