பாட்னா: “கடந்த 1990-களில் இருந்தது போலவே பிஹார் மாநிலம் ஏழ்மையான மிகவும் பின்தங்கிய மாநிலமாகவே இருக்கிறது. இங்கு எதுவும் மாறிவிடவில்லை” என்று பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ பேக் நிறுவனரும், அரசியல் வியூகருமான பிரசாந்த் கிஷோர், மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் அமைந்துள்ள பிஹாரின் காந்தி ஆஸ்ரமத்தில் இருந்து, தனது 3,500 கி.மீ. யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று தனது யாத்திரையின் முதல் நாளில் மாநிலத்தில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளையும் குற்றஞ்சாட்டினார். அப்பேது பேசிய பிரசாந்த் கிஷோர், “கடந்த 30 – 40 வருடங்களாக பிஹார் கல்வி மற்றும் சுகாதாரத்தில் வளர்ந்துள்ளதாக கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இங்கு எதுவும் மாறிவிடவில்லை. கடந்த 1990ம் ஆண்டு பிஹார் ஏழ்மையான மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. இப்போது, 2022 லும் அப்படியே தான் இருக்கிறது. மக்கள் வேலைக்காக இங்கிருந்து பிறமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றனர் என்று தெரிவித்தார்.
யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின், ஏழ்மையான, பின்தங்கிய ஒரு மாநிலத்தின் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான முக்கியமான முதல் படி, சிறந்த மற்றும் வளர்ச்சியடைந்த பிஹார் ஜன் சூரஜ்-க்காக, இந்த சமூகத்தின் உதவியுடன், ஒரு புதிய மற்றும் சிறந்த அரசியல் அமைப்பை உருவாக்க, பிஹாரின் கிராமங்கள், நகரங்களை இணைப்பதற்காக 3,500 கிமீ பாதயாத்திரை மேற்கொள்வது என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக ஜன் சூரஜ் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், சமூகத்தின் கடைகோடியில் இருந்து சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஜனநாயக அமைப்பில் இணைப்பதே இதன் நோக்கம் என்று கூறிப்பட்டிருந்ததது. கடந்த மே மாதம் ஜன் சூரஜ் அமைப்பைத் தொடங்கும் போது, பிஹாரின் மாற்றத்திற்காக மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் பாத யாத்திரை தொடங்குவேன் என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.