ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸை சேர்ந்த அலய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.
2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு நேற்று தொடங்கியது. அதன்படி, முதல் பரிசாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அலெய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட இருக்கிறது.
ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் பெரிய தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான வழியைக் கண்டறிந்ததற்காக மூவருக்கும் இவ்விருது அளிக்கப்பட இருக்கிறது.