புதுடெல்லி: 500 நாட்களில் 25,000 செல்போன் டவர்களை நிறுவ ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு, இதற்காக ரூ.26,000 கோடி நிதி ஒக்கீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு விவரம்: அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற மாநில தகவல்தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான டிஜிட்டல் இந்தியா மாநாட்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார். அப்போது பேசிய அமைச்சர், “டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நாட்டின் ஒவ்வொரு மூலையையும் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அதற்காக அடுத்து வரும் 500 நாட்களில் நாடுமுழுவதும் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவுவதற்கு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
இந்த மாநாட்டில், மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தொலைத் தொடர்பு இணையமைச்சர் தேவுசின் சவுகான், ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸம், பிஹார், மத்தியப்பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்ராகண்ட், தெலங்கானா, மிசோரம், சிக்கிம், புதுச்சேரி ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொலைத் தொடர்புத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “இந்த திட்டத்திற்கான நிதி யுனிவர்சல் சர்வீஸ் அப்ளிகேஷன் ஃபண்ட் (USOF)மூலம் வழங்கப்பட்டு, பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் மூலம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.