கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தோக்கமூர் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவரை நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர். போலீஸார் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் அடுத்துள்ளது தோக்கமூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள தோக்கமூர், எல்.ஆர்.மேடு, எடகண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், தோக்கமூர் பகுதியில் நூறு பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களில் பெரும்பாலோர் விவசாயக் கூலி தொழில் செய்பவர்கள். இந்நிலையில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும், தோக்கமூர் திரவுபதி அம்மன் கோயிலுக்கும் இடையே உள்ள 3 ஏக்கர் பரப்பளவிலான, அரசுக்கு சொந்தமான அனாதீனம் நிலப்பகுதியை, பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கவும், வி.ஏ.ஓ அலுவலகம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் நியாய விலை கடை உள்ளிட்டவற்றுக்குச் செல்ல நடை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.
இச்சூழலில், கடந்த 2015-ம் ஆண்டு பட்டியலின மக்கள் அனாதீன நிலத்தை பயன்படுத்த முடியாத வகையில், அந்த நிலத்தில் தோக்கமூர் கிராமத்தின் ஒரு பிரிவினர், 90 மீட்டர் நீளம், 8 அடி உயரத்துக்கு தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர். இது தீண்டாமைச் சுவர் எனக் கூறி, அதனை அகற்றுமாறு பட்டியலின மக்கள் தொடர்ந்து, கோரிக்கை வைத்தும் பலனில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தோக்கமூர் தீண்டாமை சுவரை அகற்ற தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.
இதன்விளைவாக, அனாதீனம் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுவரை அகற்ற மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். போலீஸ் பாதுகாப்பு இதையடுத்து, 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவரை நேற்று காலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன், 5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அதிரடியாக அகற்றினர். இதனால், பட்டியலின மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில், அவர்கள் கோயிலையொட்டி வேலி அமைப்பதற்காக நடப்பட்ட கான்கிரீட் கம்பங்களையும் அகற்றுமாறு பட்டியலின மக்கள் கோரினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் உறுதியளித்தார். தோக்க மூர் கிராமத்தில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.