அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ். இவர், பட்டியலின வகுப்பு அதிகாரிகளிடம் மட்டும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதாகவும், இதனால் வட்டாட்சியர் தேன்மொழி என்பவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கும் மாநில மனித உரிமை ஆணையம், விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டிருப்பது, மாவட்ட அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.
என்ன நடந்தது என அரியலூர் மாவட்ட உயர் அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம். “தேன்மொழி என்கிற அதிகாரி தற்போது கேபிள் டி.வி வட்டாட்சியராக இருந்துவருகிறார். இவர், கடந்த வருடம் செந்துறை ஏரியாவில் ரெகுலர் தாசில்தாராக இருந்தபோது ‘பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை’ மூலமாகத் தமிழக முதல்வர் மேடையில் வைத்து முஸ்லிம்களுக்கு வழங்கிய இடத்தை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சேர்த்து கிட்டத்தட்ட 30 பேருக்கு மேல் தேன்மொழியே தனிப்பட்ட முறையில் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்.
அதைப் பட்டா போட்டுத் தர வேண்டிய அதிகாரம் வெல்ஃபேர் தாசில்தாருக்கு மட்டும்தான் உண்டு. அதனைத் தேன்மொழி கொடுத்ததும், அவரை ஆட்சியர் அழைத்து நிற்க வைத்துத் திட்டிப் பேசியிருக்கிறார். `அதற்காக ஓர் அதிகாரி என்றும் பார்க்காமல் அவரை எப்படி நிற்கவைத்துப் பேசலாம். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் ஆட்சியர் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்.
இதே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் ஆட்சியர் இப்படி நடந்துகொள்வாரா?’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துப் பதிவிட்டனர். இந்தச் சம்பவம் நடந்து 8 மாதங்கள் கடந்த நிலையில், மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார் தேன்மொழி” என்றனர்.
இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் கேட்டோம். “அதிகாரிகளை விரட்டி வேலை வாங்குவது தவறா? ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடக்கும் குறைதீர் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் அவரது இடப் பிரச்னையை தீர்த்து வைக்கக் கோரி 12 முறை மனுக்கொடுக்கிறார். நானும் அந்த அதிகாரியை ஒவ்வொரு முறையும் அழைத்துக் கேட்கிறேன். அவரும் சாதாரணமாக, `சரிசெய்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவரிடம் நான் எப்படி நடந்துகொள்ளவேண்டு என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
மக்கள் எதற்காக ஆட்சியரை நோக்கி வருகிறார்கள். சம்மந்தப்பட்ட நபரின் பிரச்னையை தீர்த்துக்கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தானே வருகிறார்கள். ஆனால் இங்குள்ள சில அதிகாரிகள் பேப்பரை வாங்கிவைத்துக்கொண்டால் அதிகாரிகள்மீது மக்களுக்கு நம்பிக்கை எப்படி வரும். அவர்களை விரட்டி வேலை வாங்கியதால்தான் என்மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். நான் சாதிரீதியாகப் பேசினேன் என்று சொல்வது முற்றிலும் பொய். அவர்கள் யார் என்ன நடந்தது என்றெல்லாம் என்னால் சொல்லமுடியாது. இந்த விவகாரம் வழக்கு வரை சென்றிருப்பதால் இது குறித்து நான் எதுவும் பேசக் கூடாது” என்றார்.