மதுரை: போலி பட்டா வழங்கிய வழக்கில் புரோக்கரின் முன்ஜாமீன் ரத்தானது. தேனியை சேர்ந்த உமாமகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வைரம் என்ற ராஜா கேட்டுக் கொண்டதால் திம்மராசநாயக்கனூரில் சொத்து வாங்கினேன். அந்த நிலத்துக்கு போலி பட்டா வழங்கினர். துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் துணையுடன் போலி பட்டா தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புரோக்கர் வைரம் என்ற ராஜா ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் 300 பேரிடம் பணம் வசூலித்து 300 போலி பட்டாக்கள் வழங்கியுள்ளார். தற்போது வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வைரம் என்ற ராஜாவுக்கு தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விபரங்களை மறைத்து முன்ஜாமீன் பெற்றுள்ளார். அவரது முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.தாரணி, மனுதாரர் மீது 4 வழக்குகள் உள்ளன. அவர் 300 போலி பட்டாக்கள் வழங்கியுள்ளார். ரூ.73.40 லட்சம் வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். நிலுவை வழக்கு விபரங்களை கீழ் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. எனவே வைரம் என்ற ராஜாவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.