ஆன்மிகத்திற்கு எதிரானதல்ல திமுக ; ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு எதிரானது-ஸ்டாலின்

வள்ளலார் பிறந்தநாள் விழாவில் பங்குபெற்று பேசியிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆன்மிகத்திற்கு எப்போதும் எதிரானதல்ல என்று பேசியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வள்ளலார் பிறந்தநாள் உள்பட முப்பெரும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில், ‘ வள்ளலார்-200 ‘ இலட்சினை, அஞ்சல் உறை மற்றும் சிறப்பு மலரை அவர் வெளியிட்டார்.
வள்ளலாரின் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலையை தொடங்கியது மற்றும் வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டியது ஆகிய மூன்று நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்படுகின்றது. இன்று முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தொடர்ச்சியாக 52 வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள வள்ளலார் முப்பெரும் விழாவினை தமிழக முதலமைச்சர் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்வில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் வள்ளலாரின் முப்பெரும் விழாவை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு அன்னதானம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
image
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள், அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் என்பது போல், திமுக அரசு வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துள்ளோம். சிலருக்கு இது ஆச்சரியம் , அதிர்ச்சியாக கூட இருக்கலாம் , அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாகவே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
image
திராவிட மாடல் அரசு ஆன்மிகம், மக்களின் நன்மைக்கு எதிரானது என மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் பேசி வருகின்றனர். மற்றும் நான் பேசியதின் குறிப்பிட்ட பகுதியை வெட்டி ஒட்டி சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். எனவே தெளிவாக சொல்கிறேன், ”ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக, ஆன்மிகத்தை தங்களது அரசியலுக்கும், சுய நலனுக்கும், உயர்வு தாழ்வு ஏற்படுத்த பயன்படுத்துவோருக்கும் எதிரானது தான் திமுக”. பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற வள்ளுவரின் மண் தமிழ் மண். நட்ட கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் எனும் சித்தர்கள் உலவியது, இறைவன் ஒருவனே இறைவன் ஜோதி மயமானவன் என்ற வள்ளலார் வாழ்ந்த மண்.
image
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை அண்ணா முன்வைத்தார். வள்ளலார் நகரை உருவாக்கியவர் கருணாநிதி. அறப்பணிகளை கண்காணிப்பதற்காகவே, கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்பவர் சேகர்பாபு. ஆன்மிக செயற்பாட்டாளர் சேகர்பாபு.
தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வடலூரில் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும். 100 கோடி மதிப்பில் அதற்கான பணி நடக்கிறது , விரைவில் கட்டுமான பணி தொடங்கும். மேலும் வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ஓராண்டுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட உள்ளது, அதற்கு 3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றும் மணிமேகலையின் அமுத சுரபி, வள்ளலாரின் அணையா நெருப்பு வழியில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
image
மேலும் “பசிப்பணி போக்கி, அறிவுப் பசிக்கு தீனி வழங்கும் அரசு இது ” என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த முப்பெரும் விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.