புதுடெல்லி: இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் சேவையை அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் வழங்குவது எப்போது என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதனை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளருமான பிரவீன் குமார் புர்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவையை வழங்க உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளருமான பிரவீன் குமார் புர்வார் இதனை தெரிவித்துள்ளார். மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் இதனை உறுதி செய்துள்ளார்.
முன்னதாக, வரும் நவம்பர் முதல் 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராகி உள்ளது. இதற்கான பணிகளை டிசிஎஸ் மற்றும் டெலி மேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 4ஜி சேவை மூலம் பிஎஸ்என்எல் வருவாயில் ஏற்றம் இருக்கும் என பிரவீன் குமார் புர்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5ஜி நெட்வொர்க்கைப் பொறுத்தவரை, அதற்கான சேவைக் கட்டணம் மலிவு விலையில் இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. உலகிலேயே மலிவான கட்டணத்தில் 5ஜி சேவையை வழங்கும் நிறுவனமாக ஜியோ இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனமும் மலிவு விலையில் இந்த சேவையை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் ஏர்டெல் நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்க ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் வசம் உள்ள திட்டம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது.