புதுடெல்லி: இலவசங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியாக அளித்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை எனக் கூறி வழக்கை 3 பேர் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. அதேநேரம் பிரதமர் மோடி, இலவசங்கள் மற்றும் அதுதொடர்பான அரசியல் கட்சிகளின் அறிவிப்புகள் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் திரட்டப்படுவது எவ்வாறு என்பது குறித்த உண்மை தகவலை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில், ‘தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக போதிய தகவல்கள் விளக்கப்படாமல் இருத்தல் மற்றும் இந்த வாக்குறுதிகளால் நிதி நிலைத்தன்மையின் மீது ஏற்படும் விரும்பத்தகாத தாக்கத்தை தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதிக்கான நிதி ஆதாரத்தை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் அதற்கான திட்டங்கள், நிதி நிலை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வரும் 19ம் தேதிக்குள் தங்களது தரப்பு ஆலோசனைகளை வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய ஆலோசனையின்படி, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விபரங்களை, தேர்தல் நடத்தை விதிகளின் (எம்சிசி) ஒரு பகுதியாக கருதப்படும் பிரமாணப் பத்திரத்தில் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் இத்திட்டத்திற்கு சில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்தின் இந்த ஆலோசனை கேட்பானது, இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மற்றொரு தாக்குதல் ஆகும்’ என்று கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘இங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது! முதலில், பிரதமர் முன்மொழிகிறார், பின்னர் தேர்தல் ஆணையம் தனது கருத்தை தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையம் அதன் மீதான நம்பகத்தன்மையை சிதைக்கும் வகையில் செயல்படுகிறது’ என்று கூறியுள்ளார்.