உக்ரைன் விவகாரம் | அமைதி நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்: பிரதமர் மோடி

புதுடெல்லி: உக்ரைன் விவகாரத்திற்கு ராணுவ மோதல் தீர்வாக அமையாது. எந்தவிதமான அமைதி நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை உக்ரைன் அதிபர் வொளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.

சமீபத்தில் உக்ரைனிடமிருந்து கைபற்றப்பட்ட 4 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்தகாக அந்நாட்டின் சட்டவிரோத அறிவிப்புக்கு எதிராக, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் நடந்த வாக்கெடுப்பை இந்திய புறக்கணித்திருந்தது. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசியில் உரையாடினார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும், இந்திய பிரதமர் மோடியும் தற்போதைய உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசி வழியாக விவாதம் நடத்தினர். அப்போது, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், எந்த பிரச்சினைக்கும் ராணுவ மோதல்கள் தீர்வாகாது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும் எந்தவிதமான அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் பிறநாடுகளின் இறையாண்மை, எல்லைகளை மதித்து நடக்க வேண்டும். அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து ஏற்படுவது பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெறும் அச்சுறுத்தலையும், ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்த பிரதமர், உக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அணுஉலைகள் பாதுகாப்பில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்றும் வலியுறுத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் க்ளாஸ்கோவில் நடந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த முக்கியமான விஷயங்கள் குறித்தும் நினைவுகூர்ந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் சட்டவிரோதமாக இணைத்ததற்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருந்தது. அப்போது “இந்திய அரசு எப்போது அமைதி, பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான உறவுகளின் பக்கமே நிற்கிறது. உக்ரைனில் அண்மையில் நடந்துள்ள நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. இருப்பினும் இந்தப் பிரச்சினையின் முழுமையான நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்ததது.

15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவளித்திருந்த நிலையில் இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் கபோன் நாடுகள் அதனைப் புறக்கணித்தன.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அந்நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 6 மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நீடித்துவருகிறது. இந்த நிலையில் இந்த 6 மாதங்களில் முதல் முறையாக இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.