80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘உதயம்’.
J.D என்கிற அந்த ரவுடி மாணவனைப் பார்த்து கல்லூரியே அஞ்சி ஒதுங்குகிறது. அவன் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு உள்ளூர மனம் கொதித்துக் கொண்டிருக்கிறான் புதிதாக வந்த ஒரு மாணவன். இருவருக்கும் மோதல் ஏற்படும் சூழல். விழுந்து கிடக்கும் சைக்கிளிலிருந்து செயினை ஆவேசத்துடன் உருவுகிறான் ஹீரோ. திரையரங்கில் உள்ள ஒட்டுமொத்த பார்வையாளர்களும் ஒரு கணம் திகைத்து பிறகு பரவசத்துடன் கைதட்டுகிறார்கள். இந்தியச் சினிமாவின் மறக்க முடியாத காட்சிகளுள் ஒன்று இது.
யெஸ்… மிகச் சரியாக 33 வருடங்களுக்கு முன்பு, இதே அக்டோபர் ஐந்தாம் தேதியன்று வெளியான ‘சிவா’ (தமிழில் உதயம்) திரைப்படத்தைப் பற்றித்தான் இந்த வாரக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
மேற்குறிப்பிட்ட சைக்கிள் செயின் காட்சியானது, ஒரு குறியீடாகவே பிறகு மாறிவிட்டது. சாக்லேட் பாயாக அறியப்பட்ட நடிகர் மாதவன் கூட ஓடிச் சென்று ஷட்டர் கதவை மூடி வில்லனின் ஆட்களைத் திகைக்கச் செய்தார். இது போன்று உருவாக்கப்பட்ட பல ஆக்ஷன் காட்சிகளின் விதை, அந்த சைக்கிள் செயினில் இருந்தது.
ஹாலிவுட்டில் கேங்க்ஸ்டர் படங்களை உருவாக்கிய முன்னோடிகளான பிரான்சிஸ் போர்ட் கோப்போலா, மார்ட்டின் ஸ்கார்சஸி போன்று இந்தியாவில் ‘Underworld’ படங்களுக்கு ஒரு கல்ட் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் இது.
RGV – “இவர் அடிச்ச பத்து பேருமே டான்தான்!”
மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ எப்படித் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இங்குள்ள இளம் இயக்குநர்களுக்கு உத்வேகமாக அமைந்ததோ, அதே போன்று தெலுங்கு சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்கிய திரைப்படம் ‘சிவா’. ஸ்டெடிகேம், சவுண்டு டிசைன் என்று பல புதிய நுட்பங்களைத் தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்திய படம். “யாருடா இந்தாளு… இப்படி மிரட்டியிருக்கிறான்?’ என்று பலரும் திரும்பிப் பார்த்தார்கள். இதன் தமிழ் வடிவம் வெளியான போது ஏறத்தாழ இதே தாக்கத்தை இங்கும் ஏற்படுத்தியது.
RGV என்று அறியப்படும் ராம்கோபால் வர்மா இளமையில் சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரிக்கு பங்க் அடித்து சினிமா தியேட்டரே கதி என்று இருந்தார். சில திரைப்படங்களை அவை உருவாக்கப்பட்ட விதத்திற்காகத் திரும்பத் திரும்பப் பார்த்தார். காசில்லாத சமயங்களில் தியேட்டரின் பின்புற வாசலில் நின்று வசனங்களையும் இசையையும் ‘ஒலிச்சித்திரமாக’ கேட்டார்.
பெரும்பாலான பெற்றோர்களைப் போலவே ராமுவின் பெற்றோர்களும் “உருப்படற வழியைப் பாரேம்ப்பா” என்று உபதேசித்தார்கள். இத்தனைக்கும் ராமுவின் தந்தை அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். கட்டடப் பொறியியல் படித்திருந்த ராமு, பெற்றோர்களின் தொந்தரவு தாங்காமல், பணி நிமித்தமாக அரைமனதுடன் நைஜீரியாவிற்குக் கிளம்ப முடிவு செய்தார். ஆனால் திடீரென்று மனம் மாறி ஒரு வீடியோ லைப்ரரியை அமைத்தார். எந்த வகையிலாவது சினிமாவுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற ஆசையின் வெளிப்பாடு அது.
சினிமாவிற்கு உதவிய கல்லூரி அனுபவங்கள்
சிறிது காலம் கழித்து இயக்குநர் B.கோபாலிடம் நான்காம் அசிஸ்டென்டாக இணைந்து ‘கலெக்டர் காரி அப்பாயி’ என்கிற திரைப்படத்தில் பணிபுரிய ஆரம்பித்தார். அங்குதான் நாகார்ஜுனாவின் அறிமுகமும் நட்பும் ஏற்பட்டது. ‘ஏதாவது புதுசா செய்யணும்’ என்கிற ஒத்த அலைவரிசையும் ஆர்வமும் இருந்ததால் இருவருக்குள்ளும் பிணைப்பு அதிகமாகியது. சினிமா மீது ராமுவிற்கு இருந்த ஆர்வமும் சிந்தனைகளும் நாகார்ஜுனாவைக் கவர்ந்தன.
ஆங்கிலப்புலமை, உலக சினிமா ஞானம், ஒரு கதையின் மையப்புள்ளியிலிருந்து விலகாமல் காட்சிகளை யோசித்தல், விவரித்தல் போன்ற திறமைகள் காரணமாக சக உதவி இயக்குநர்களின் பொறாமைகளையும் “பையன் வித்தியாசமா யோசிக்கிறானே!” என்கிற நற்பெயரையும் பெற்றார் ராமு. என்றாலும் தனது முதல் திரைப்பட வாய்ப்பை பெறுவது அவருக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. அவர் முதலில் இயக்க திட்டமிட்டது ‘ராத்’ என்ற பெயரில் ஹாரர் ஜானரில் அமைந்த படம். ஆனால், “இதையெல்லாம் யாரு பார்ப்பா?” என்கிற நிராகரிப்பையே அதிகம் எதிர்கொள்ள நேரிட்டது.
எனவே தனது கல்லூரி அனுபவங்களிலிருந்து ஒரு கதையை உருவாக்க ஆரம்பித்தார் ராமு. ‘ரவுடியிசம்’ என்பது மாணவர்களை மட்டுமல்லாது இந்தச் சமூகத்தையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைத் தான் நேரில் கண்ட காட்சிகள் மற்றும் மனிதர்களிலிருந்து உருவாக்கினார். இந்தத் திரைக்கதை நாகார்ஜுனாவை கவர்ந்தது. ஹீரோவிற்குக் கதை பிடித்தாலும் கூட, நாகார்ஜுனாவிற்கு ஏற்கெனவே இருந்த ஒப்பந்தங்கள் காரணமாகப் படத்தை ஆரம்பிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. “பிராக்டிகல் அனுபவம் அதிகம் இல்லாத ஒரு இளைஞனை நம்பி எப்படி முதலீடு செய்ய முடியும்?” என்று தயாரிப்பு நிர்வாகம் நினைத்தது. பார்த்தார் ராமு. சில பல ஜில்லாலங்கடி வேலைகளைச் செய்து படத்தை ஆரம்பித்து 55 நாள்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
1989-ம் ஆண்டு ‘சிவா’ திரைப்படம் வெளியான போது, நஷ்டமாகாத அளவிற்கு ஓடினால் போதும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். முதல் இரண்டு நாள்களுக்குப் பெரிதாக எந்தச் சந்தடியும் இல்லை. “ஏ… செமயா இருக்குப்பா” என்கிற வாய்மொழி காரணமாகப் படத்தின் சிறப்பு பரவியதில் பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்தது. தியேட்டர்களும் அதிகரித்தன. ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவே ராமுவை திரும்பிப் பார்த்தது. பிறகு நடந்தது வரலாறு. பல சென்ட்டர்களில் 200 நாள்களுக்கும் மேலாக ஓடி வசூலை வாரிக் குவித்தது.
ரவுடியிசமும் காலேஜ் கேம்பஸூம்
விஜயவாடாவில் உள்ள அந்தக் கல்லூரிக்குப் படிக்க வருகிறான் சிவா என்கிற மாணவன் (நாகார்ஜுனா). கல்லூரியின் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, ரவுடியிசம் மிகுந்திருக்கிறது. வன்முறை தலைவிரித்தாடுகிறது. இதன் பின்னணியில் பவானி என்கிற ஒரு பெரிய ரவுடி (ரகுவரன்) இருப்பதை சிவா அறிகிறான். மாணவர் தேர்தல் முதற்கொண்டு பல விஷயங்களில் ரவுடியிசம் நுழைகிறது. அவர்களின் தாக்குதல் காரணமாக நண்பனின் மரணம் நிகழ்வதால் கொதித்தெழும் சிவா, தானும் வன்முறையைக் கையில் எடுக்கிறான். முள்ளை முள்ளால் எடுக்கும் இந்த அபாயகரமான ஆட்டத்தில் சிவாவால் பெற்றி பெற முடிந்ததா என்பதை விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் புதுமையும் கலந்து சொல்லியிருக்கிறார் ராமு.
படு ஸ்டைலான ஹீரோக்களில் ஒருவர் நாகார்ஜுனா. என்னவொன்று அவர் கண்களின் வழியாக நடிப்பு கொஞ்சம்தான் வரும். அவருடைய ஆரம்பக் கால நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய திருப்பத்தை இந்தத் திரைப்படம் ஏற்படுத்தியது. “என்ன எப்பப்பாரு உர்றுன்னு இருக்கே?” என்று நாயகியே கிண்டலடிக்கும் அளவிற்கு இருக்கும் நாகார்ஜுனாவின் இறுக்கமான முகபாவம், படத்தின் கேரக்ட்டருடன் கச்சிதமாகப் பொருந்திப் போனது. தமிழில் இவருக்குப் பின்னணி தந்த நடிகர் சுரேஷின் குரல் பிசிறில்லாமல் ஒட்டிக் கொண்டது.
திருப்பதி ஏழுமலையானைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து கைவிட்டுப் போன முக்கியமான ஒருவர் என்று அமலாவைச் சொல்லலாம். இந்தப் படத்தில் வழக்கம் போல் தனது துள்ளலான நடிப்பைத் தந்திருக்கிறார் அமலா. பாடல் காட்சிகளில் அத்தனை அழகு. “அவர் போற பாதை ஆபத்துன்னு தெரியும். ஆனா நானா எதுவும் சொல்லி அவரைத் தடுக்க மாட்டேன்” என்று சிவாவைப் பற்றி தன் அண்ணனிடம் உருக்கமாகச் சொல்வது போன்ற காட்சிகளில் சிறந்த நடிப்பையும் தந்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் போது உண்மையிலேயே கெமிஸ்ட்ரி ஏற்பட்டு நாகார்ஜுனாவைத் திருமணம் செய்து கொண்டார்.
பவானி – மாஸ்டரிலும் தொடரும் மறக்க முடியாத வில்லன்
ரகுவரன் – சந்தேகமேயில்லாமல் தமிழின் நடிப்பு பொக்கிஷங்களில் ஒருவர். ஹீரோவாக இருந்து பிறகு வில்லன் பாத்திரங்களுக்கு மாறியவர். ஒல்லியான தோற்றத்தைக் கொண்ட இவரை, ஊரையே மிரட்டும் ரவுடி பாத்திரத்தில் கற்பனை செய்ய அதிக துணிச்சல் தேவை. ஆனால் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ‘பவானி’ என்கிற பாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றினார் ரகுவரன். இந்தியச் சினிமாவின் சிறந்த வில்லன் பாத்திரங்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் ‘பவானி’ இருப்பார். (‘பாட்ஷா’வின் மார்க் ஆண்டனியும்).
சில பல சீன்கள் கடந்த பிறகுதான் இந்தப் பாத்திரம் அறிமுகமாகும். ‘யாருய்யா இந்த பவானி?’ என்று நமக்கே ஆர்வம் தோன்றும்படி ஏகப்பட்ட பில்டப் தரப்பட்டிருக்கும். ஒரு திறமையான நடிகனால்தான் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியும். அதைத் திறம்பட நிறைவேற்றினார் ரகுவரன். குறைவான வசனங்களைப் பயன்படுத்தி தன் உடல்மொழியின் மூலமே பயங்கரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தினார் ரகுவரன்.
கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர் நடிகர் என்று பல்வேறு முகங்கள் தனிக்கெல்லா பரணிக்கு உண்டு. இந்தப் படத்திற்கு வசனம் எழுதியது இவரே. இது மட்டுமல்லாமல் பவானியின் வலது கரமாக, ‘லாலாஜி’ என்கிற மறக்க முடியாத பாத்திரத்தில் நடித்ததின் மூலம் பலரின் கவனத்தைக் கவர்ந்தார். சிவா திரைப்படம் 25 ஆண்டுகள் நிறைந்ததையொட்டி ஓர் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. தெலுங்கில் இப்படி நிகழ்வது இதுவே முதன்முறை. இதன் வெளியீட்டு விழாவில் பரணி பேசும் போது தான் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “முதல் நாள் காட்சில நடிக்க வர்றேன். பவானி கிட்ட போய் ‘இன்னார் பார்க்க வந்திருக்காருன்னு சொல்லணும்’ எனக்கு வசனம் மறந்து போச்சு. கிட்ட போய் தலையாட்டி சமாளிக்கறேன்.., ‘கட்… ஷாட் ஓகே’ன்னு டைரக்டர் கிட்ட இருந்து சத்தம் வந்ததைக் கேட்டு ஆச்சரியமா இருந்தது. இந்தக் காட்சிக்கு இவ்வளவு போதும்னு அவர் முடிவு செஞ்சார்.”
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் முதன் முதலாக நடிக்க வந்த பல நடிகர்களும் இதையேதான் சொல்கிறார்கள். சினிமா என்பது வசனங்களை அதிகம் நம்பாமல் நடிகர்களின் முகபாவங்கள், உடல்மொழியின் மூலமாகச் செயல்பட வேண்டிய ஒரு மீடியம் என்பதை ராமு மிகச்சரியாகப் புரிந்து வைத்திருந்தார் என்பதையே இந்தச் சாட்சியங்கள் காட்டுகின்றன.
ஜே.டி.சக்ரவர்த்தி இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். இவரின் இயற்பெயர் சக்ரவர்த்தி என்றாலும் கூட இதில் வரும் பாத்திரமான ‘ஜே.டி’ என்பது கூடவே ஒட்டிக் கொண்டது. இதில் ரவுடி மாணவனாக அறிமுகம், ஆனால் பிற்காலத்தில் ராமுவின் படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்த வரிசையில் இந்திப் படமான ‘சத்யா’ ஒரு முக்கியமான படைப்பு. மினிஸ்டராக கோட்டா ஸ்ரீனிவாச ராவ், சிவாவின் அண்ணனாக முரளி மோகன், நண்பர்களாக சுபலேகா சுதாகர், சின்னா, ராம் ஜெகன் போன்றோர் நடித்திருந்தார்கள்.
ரவுடியிசத்தின் ஊற்றுக்கண்களும் படிநிலையும்
பொதுவாக சினிமாக்களில் ரவுடிகள் என்றாலே ஹீரோவின் மீது வந்து மொத்தமாகப் பாய்வார்கள். பிறகு சுண்டல் வாங்குவது போல் தனித்தனியாக வரிசையில் வந்து அடிவாங்கி கேமரா மறைவது வரை கீழே விழுந்து வலியால் துடிப்பது போல் பாவனை செய்வார்கள். இதுதான் வழக்கமான மரபாக இருந்தது. ஆனால் ரவடியிசத்தின் படிநிலை எத்தனை புத்திசாலித்தனமாகச் செயல்படும் என்பதை ராமு நடைமுறையில் நன்கு கவனித்து வைத்திருந்தார். அதையே மிகச்சிறப்பாகப் படத்திலும் பதிவு செய்தார்.
இதில் கணேஷ் என்கிற ரவுடி பாத்திரம் வரும். இவரின் அறிமுகத்தோடுதான் படமே துவங்கும். ‘தனது ஆளான ஜே.டியை சிவா அடித்து விட்டான்’ என்பதை அறிந்ததும் இவர் முதலிலேயே வன்முறையைக் கையில் எடுக்கமாட்டார். சிவாவிடம் வந்து அவனது சட்டையைப் பாசத்துடன் நீவி விட்டு “பாரு தம்பி… ரெண்டு பேரை அடிச்சுட்டா ஹீரோன்னு நெனச்சுக்காத… எலெக்ஷன் வேலையை விட்டுடு” என்று சொல்லிப் பார்ப்பார்.
இதைப் போலவே பவானியும் புத்திசாலித்தனமான ரவுடியாக இருப்பான். “இந்த காலேஜ் பசங்க நமக்குத்தான் உபயோகமா இருக்கணும். அவனுங்க பிரச்னைகளை சும்மா சும்மா நாம தீர்த்துக்கிட்டு இருக்கக்கூடாது” என்பான். ரவுடிகளை விடவும் அரசியல்வாதிகள் இன்னமும் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள். பவானியை விடவும் சிவாவின் கை ஓங்கிய விஷயம் தெரிந்தவுடன் சிவாவிடம் ஒரு அமைச்சர் வந்து பேரம் பேசுவார். “இந்த பவானி, கணேஷ்-ன்ற குப்பைங்கள்லாம் இருக்கட்டும். நீ என் பக்கம் வந்துடு” என்பார்.
ஸ்டெடிகேம், நவீன சவுண்டு டிசைன்…
RGV-ன் முதல் திரைப்படத்தில் தவிர்க்க முடியாத ஜனரஞ்சக அம்சங்கள் இருந்தாலும் ஆரம்பத்திலேயே அவரது டைரக்ஷன் முத்திரை அழுத்தமாகப் பதிந்திருந்தது. குளோசப் ஷாட்களில் ஒரு கேரக்டர் மெல்ல தலையசைப்பதின் மூலமாகவே சூழலின் பயங்கரத்தை உணர்த்திவிடுவார். அதிக மெனக்கெடல்கள் இன்றி ஒரு சிறிய அசைவின் மூலம் வெடிகுண்டின் ஆரம்பம் நமக்கு உணர்த்தப்பட்டு விடும். இதே பாணியை ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படத்திலும் கவனிக்கலாம்.
தெலுங்கு சினிமாத் துறையில் முதன் முறையாக ஸ்டெடிகேம் இந்தப் படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வரும் சேஸிங் காட்சிகள் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டன. ஜேடியை கல்லூரி வளாகத்தில் துரத்தித் துரத்தி சிவா அடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருந்தன. சிவாவின் நண்பன் ஒருவனை, வில்லனின் ஆட்கள் கொலைவெறியோடு தேடும் காட்சியும் அருமையாகப் படமாக்கப்பட்டது. ஒரு கட்டடத்தின் சுவரில் ஓடி வரும் ஆசாமியின் நிழல் சிறியதாகத் தோன்றி பெரியதாக வளரும் காட்சி, ஒரு திருப்பத்தில் செல்லும் ஆசாமி கத்திக் குத்துடன் பின்னால் வந்து விழுவது என்று புதுமையான வகையில் படமாக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. (ஒளிப்பதிவு: S.கோபால் ரெட்டி). இதைப் போலவே இதன் அபாரமான சவுண்டு டிசைனும் பலரால் கவனிக்கப்பட்டது. பிறகு பல படங்களில் இந்த நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்காகக் கவலைப்பட்ட இளையராஜா
இந்தப் படத்திற்கு இசை இளையராஜா. ஆம், தமிழிற்கு நிகராக தெலுங்கிலும் தனது வெற்றிக் கொடியை அட்டகாசமாகப் பறக்க விட்டிருந்தார் ராஜா. ‘புதிய இயக்குநர்தானே’ என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் வழக்கம் போல் தன்னுடைய அற்புதமான இசையை இந்தப் படத்திற்கு அள்ளித் தந்திருந்தார். இந்த ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களும், இன்றும் கூட புத்துணர்ச்சியுடன் இருக்கும். அத்தனை நவீனத்தன்மை அதிலிருந்தது. பல இடங்களில் அதிரடியான பின்னணி இசையைத் தந்திருக்கும் ராஜா, அவசியமான இடங்களில் மௌனத்தையும் சரியாகப் பதிவு செய்திருப்பார்.
ஒரு மாணவனை, இன்னொரு மாணவன் துரத்தித் துரத்தி அடிக்கும் பரபரப்பான காட்சியில் சோக இசையையும் கலந்திருந்தார் ராஜா. “ஏன்?” என்று இயக்குநர் கேட்ட போது “படிக்க வேண்டிய மாணவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று எனக்கு ஏற்பட்ட சோகத்தை இசையால் உணர்த்தினேன்” என்று ராஜா சொன்ன பதிலைப் பரவசத்துடன் ஏற்றுக் கொண்டார் ராமு. ஒரு சாதாரண இசையமைப்பாளருக்கும் ஒரு கம்போஸருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
ரவுடியிசம் உருவாகி வளர்ந்திருப்பதற்கான மூலகாரணத்தை ஹீரோ அறிந்திருப்பான். “பவானியை அழிக்கறதால பிரச்னை தீர்ந்துடாது. அந்த இடத்திற்கு இன்னொருத்தன் வருவான்” என்று தெளிவாகப் பேசுவான். அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக ரவுடியிசத்தை வளர்க்கிறார்கள் என்பதும் படத்தில் காட்டப்படும். ரவுடியை ஒழிக்க அதே வன்முறையை ஹீரோ கையில் எடுப்பதைக் கூட தவிர்க்க முடியாத விஷயம் எனலாம். ஆனால் இறுதியில் பவானி இறந்துபோவதோடு படம் முடிந்து விடுகிறதே தவிர, இதற்கான தீர்வின் தடயம் கூடச் சொல்லப்படவில்லை.
RGV என்கிற மூன்றெழுத்து பிராண்ட்
கேங்க்ஸ்டர், அண்டர்வோ்ல்டு, ஹாரர், திரில்லர், பொலிட்டிக்கல் டிராமா, ரொமான்ஸ், ரோட் மூவி என்று பல்வேறு வகைமைகளில் படம் எடுத்து இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குநராக மாறினார் ராமு. அவருடைய கனவுத் தொழிற்சாலையில் படங்களை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டேயிருந்தார். பல படங்கள் பிளாப் ஆகின. சில படங்கள் உன்னதமாக அமைந்தன. RGV என்பதே ஒரு பிராண்ட் போல் ஆகியது. அமிதாப் பச்சன் முதற்கொண்டு பல முன்னணி நடிகர்கள் இவருடைய திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார்கள்.
இப்படியாக இந்தியச் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயராக ராம் கோபால் வர்மா வளர்ந்தாலும் அவரின் ‘உதயம்’ இந்தப் படத்தின் மூலம்தான் ஆரம்பித்தது. பல விருதுகளை வாங்கிய இந்தத் திரைப்படத்தை இன்று பார்த்தாலும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. நவீன சினிமாவின் புதிய அலையைத் துவக்கி வைத்த தடயங்களை இன்றும் கூட இதில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இதுவொரு முக்கியமான திரைப்படம்.