இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் புதிதாக கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தாமதப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? ஒரு வருடத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்று முழுமை பெற்றுள்ள நிலையில், இன்னொன்று கட்டுமானம் தொடங்காமல் தேங்கி கிடப்பதற்கான காரணங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டதுக்கு மத்திய அமைச்சரவை 2018ஆம் வருடம் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனை, இன்று திறப்பு விழா கொண்டாடி மக்கள் சேவைக்கு தயாராகி உள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் பிலாஸ்பூர் எய்ம்ஸ் தயாராக வேண்டும் என திட்டமிடப்பட்ட நிலையில் 4 மாத தாமதத்துடன் திட்டம் நிறைவேறியுள்ளது.
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை 2018ஆம் வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதாவது, பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவுபெறவிருந்த நிலையில் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, கட்டுமானத்தை இந்த வருடம் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க கெடு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை சுற்றுப்புற சுற்றுப்புற சுவர் தவிர பிற கட்டுமானங்கள் தொடங்கவில்லை. இதற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை ஜப்பான் நாட்டின் சலுகை – வட்டி கடன் கொண்டு கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டு, மொத்த செலவு 1,264 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் ஜப்பான் நாட்டின் JICA என அழைக்கப்படும் ஜப்பான் இன்டர்நேஷனல் கோஆபரேஷன் ஏஜென்சிக்கு அனுப்பப்பட்டது. JICA 82% செலவை கடனாக அளிக்கும் எனவும் மீதமுள்ள 18% மத்திய அரசின் பங்காக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 150 படுக்கைகள் கொண்ட தொற்றுநோய் பிரிவு ஒன்றும் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைய வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்ட 600 படுக்கை கொண்ட மருத்துவமனையாக அல்லாமல், 750 மருத்துவமனைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக தோப்பூர் எய்ம்ஸ் அமையும் என முடிவானது. இதனாலும், கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்ததால், தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான செலவு 1,977.80 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு, புதிய விவரங்கள் JICAவுக்கு அனுப்பப்பட்டது. மீண்டும் ஒப்புதல்கள் பெற வேண்டிய சூழலில், கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான இடம் மற்றும் நிலத்தை கையகப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளிலும் தாமதம் ஏற்பட்டது. 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், திட்ட மாறுதலால் மேலும் 22.49 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசு, ஜப்பான் JICA அமைப்பு என ஆலோசனைகள் நீண்டன. இந்நிலையில், பிரதமர் மோடி 2019ஆம் வருடம் பிரதமர் மோடி தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். திட்டத்துக்கான இடத்தை முடிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த தாமதம் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்றது.
சர்ச்சையில் சிக்கியுள்ள தோப்பூர் எய்ம்ஸ் 2026ஆம் வருடம் அக்டோபர் மாதம் கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது. திட்ட மேலாண்மை அமைப்பை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் நிதி ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கினர்.
2026ஆம் வருடத்தில் தோப்பூர் எய்ம்ஸ் கனவு நனவாகும் என அனைவரும் ஏற்பார்க்கும் நிலையில், பிலாஸ்பூர் எய்ம்ஸ் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, 18 சிறப்பு மற்றும் 17 தனிச்சிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் மொத்தம் 750 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. இந்த மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹிமாச்சல் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM