ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தலைமையேற்று நடத்தவேண்டும் என பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தன்னிடம் கேட்டதாகவும், ஆனால் தான் அதனை நிராகரித்து விட்டதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் 3,500 கிமீ தூரத்துக்கு ‘ஜன் சுராஜ்’ என்ற விழிப்புணர்வு பிரச்சார நடைப்பயணம் செய்து வருகிறார் பிரசாந்த் கிஷோர், இந்த நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர்,’ 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நிதிஷ் குமார் என்னை அழைத்து உதவி கேட்டார். இதனையடுத்து 2015 சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற அவருக்கு நான் உதவினேன்.
நாடு முழுவதும் எனது திறமையை நிரூபித்த பிறகு இப்போது எனது சொந்த மாநிலத்தில் வேலை செய்ய முயற்சிக்கிறேன். 10-15 நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது அவர் தனது கட்சியை வழிநடத்தும்படி என்னிடம் கேட்டார். அது சாத்தியமில்லை என்று நான் கூறிவிட்டேன்” என்று தெரித்துள்ளார்.
நிதிஷ்குமாருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் முன்னதாக பிளைவு ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது பிரசாந்த் கிஷோர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பிரசாந்த் கிஷோருக்கு பணம் எங்கிருந்து வருகிறது என ஜேடியு தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கிஷோர், “ எனக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அறிய விரும்புபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று தான், நான் பணத்திற்காக அவர்கள் செய்கின்ற வேலையைச் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அரசியல்வாதிகள் நீண்ட காலமாக என்னிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். அரசியல் வியூக வாதி என்ற எனது சாதனையை ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. இதற்கு முன் நான் யாரிடமும் கடன் கேட்டதில்லை. ஆனால் இன்று நான் மக்களிடம் நன்கொடை கேட்டு வருகிறேன் ” என கூறியுள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM