கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம்- தமிழக அரசுக்கு சுற்றுலா துறை அமைச்சகம் அனுப்பிய கடிதம்

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து, தமிழக அரசிற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி தமிழக பொதுப்பணித்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையைத் தயாரிக்கத் தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளைப் போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
image
இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல கடற்கரையிலிருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும். ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னமெனப் பெயரிடப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் ரூ.81 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்திற்குத் தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்குத் தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியிருந்தது.
தமிழக அரசின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்கள் கருத்து கேட்பு உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததோடு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நான்கு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.