புதுடெல்லி,
இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டில் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் இந்திய ராணுவம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜேஸ்மின் லம்போரியா, இந்திய ராணுவத்தின் ‘மிஷன் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ராணுவக் காவல் படையில் ஹவில்தாராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020, மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஜேஸ்மின் பதக்கங்களை வென்றுள்ளார்.
சுபேதார் நீரஜ் சோப்ரா, சுபேதார் அவினாஷ் சேபிள், நைப் சுபேதார் ஜெர்மி, ஹவ் அச்சிந்தா ஆகியோர் ‘மிஷன் ஒலிம்பிக்ஸ் விங்கால்’ வளர்க்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க விளையாட்டு வீரர்கள் ஆவர். ஜேஸ்மின், இந்திய ராணுவத்தின் மிஷன் ஒலிம்பிக்கில் இணைந்த இரண்டாவது தகுதி வாய்ந்த விளையாட்டு வீராங்கனை ஆவார்.