பாரமுல்லா: இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று ஆற்றிய உரையில்; 1947-ல் இருந்து ஜம்மு காஷ்மீரை பெரும்பாலும் ஆட்சி செய்தது அப்துல்லா குடும்பம், முஃப்தி குடும்பம், காந்தி – நேரு குடும்பம் எனும் 3 குடும்பங்கள்தான். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கு இந்த 3 குடும்பங்கள்தான் காரணம்.
தவறான ஆட்சி நிர்வாகம், ஊழல், வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்காதது என்பதுதான் இவர்களது ஆட்சியின் அடையாளமாக இருந்தது. இந்த மூன்று குடும்பங்களும் ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை.
ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களால் 1990-களில் இருந்து இதுவரை 42 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த தீவிரவாதத்தால் ஜம்மு காஷ்மீருக்கு ஏதாவது பயன் கிடைத்திருக்கிறதா? என அமித் ஷா கேள்வி எழுப்பினார். மேலும் அவர், காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள் சிலர், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? நாம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். காஷ்மீர் மக்களிடம்தான் பேசுவோம் என கூறினார்.
மேலும் அமித் ஷா கூறுகையில், தீவிரவாதத்தை நரேந்திர மோடி அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்தியாவின் மிகவும் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்ற நாங்கள் விரும்புகிறோம்.
இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாகிஸ்தான் குறித்து அடிக்கடி பேசுகிறார்கள். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது என்பதை நாங்கள் அவர்களிடம் கேட்க விரும்புகிறோம்.
ஆனால், காஷ்மீரின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைப்பதை கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் உறுதி செய்திருக்கிறோம் உள்துறை அமித் ஷா பேசினார்.