குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு… மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிக்க மாநில அரசு ஆலோசித்து வந்தது. வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருவது கவனிக்கத்தக்கது. இதுதொடர்பாக மும்பையில் ஆலோசனை நடத்திய மாநில அமைச்சரவை, 100 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஒருமனதாக முடிவு செய்தது.

இதில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மகாராஷ்டிர மாநிலத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 1.70 கோடி குடும்பங்கள் அல்லது அதைச் சார்ந்து வாழும் 7 கோடி பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 ரூபாய் கொடுத்தால் போதும்.

அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவை சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். வரும் தீபாவளியை ஒட்டி வீட்டிலேயே இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து கொண்டாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல், மும்பை மாநகராட்சி தேர்தல் உள்ளிட்டவை வரிசையாக வரவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே மாநில அரசு குடும்ப அட்டை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை வாக்காளர்களை கவரும் யுக்தியாக கூட இருக்கலாம். நாட்டின் பண வீக்க விகிதம் தற்போது 7 சதவீதமாக இருக்கிறது.

தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் தான் பண வீக்கம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 8 சதவீதமாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இம்மாநிலத்தில் காய்கறிகள் பண வீக்கம் 23.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளின் பண வீக்கம் 7.4 சதவீதமாகவும் உள்ளது. இறைச்சி, மீன் விலை ஆகியவற்றுக்கான பண வீக்கம் மட்டும் குறைவாக இருக்கிறது.

இத்தகைய சூழலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சலுகை விலையில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை மாநில அரசு அறிவித்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருவாரத்திற்கு முன்பாக திருநங்கைகள் குடும்ப அட்டைகள் பெறுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டிருந்தது.

அதன்படி, குடும்ப கார்டுகள் பெறுவதற்கு குடியிருப்பு சான்று மற்றும் அடையாள அட்டை பயன்படுத்துவதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டை, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கமிட்டியில் பதிவு செய்த சான்று ஆகியவற்றை அடையாளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.