அக்டோபர் 5 பிற்பகல் சரியாக 1.19 மணி. ஹைதராபாத் நகரம் தொண்டர்கள் படையால் குலுங்க ”பாரத் ராஷ்டிர சமிதி” (BRS) என்ற அரசியல் கட்சியை தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தொடங்கியுள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பெரிதாக அறியப்பட்ட முகங்கள் இல்லை. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் என பார்த்தவுடன் அடையாளம் காண முடிந்தவர்கள் இருவர் தான். மற்றவர்கள் சிறிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்.
அதுவும் தேசிய தலைவர்கள் பலர் இருக்க, திருமாவளவனை தனது அருகில் அமர வைத்து விருந்து உண்ண வைத்திருக்கிறார் கே.சந்திரசேகர் ராவ். இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்றதும், அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் தமிழகத்தில் கே.சந்திரசேகர் ராவிற்கு நட்பு ரீதியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இருக்கின்றனர்.
ஏன் முதல்வர் மு.க.ஸ்டாலினே சிறந்த நண்பர் தான். சென்னை வந்த சமயத்தில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்திருக்கிறார். இத்தகைய சூழலில் திமுகவில் இருந்து யாரும் அழைக்கப்படவில்லையே ஏன்? எனக் கேள்வி எழுகிறது. தமிழக அளவில் திமுகவானது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க கே.சந்திரசேகர் ராவ் முயற்சித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனது தலைமையில் கூட்டணி அமைவதையே விரும்பும். மாறாக கே.சந்திரசேகர் ராவின் தலைமையை ஏற்க விரும்பாது. அப்படியிருக்கையில் காங்கிரஸ் உடன் நட்பு பாராட்டி வரும் கட்சிகளையே கே.சி.ஆர் குறிவைக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து திமுகவை தன்வசம் ஈர்க்க கே.சிஆர் விரும்பாமல் இருக்க மாட்டார்.
ஆனால் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால் தேவையற்ற சலசலப்புகள் ஏற்படும் என எண்ணியிருக்கலாம். கே.சி.ஆரின் அடுத்த இலக்கு 2024 மக்களவை தேர்தல். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அதுவரை மாநில கட்சிகளை தன்வசம் ஈர்ப்பதற்கான வேலைகளில் கே.சி.ஆர் ஈடுபடவுள்ளார். தற்போதைய சூழலில் திருமாவளவன் உடனான நட்புறவை வலுப்படுத்தி கொள்ளலாம்.
அவரை வைத்து ஸ்டாலினையும் இழுத்து விடலாம் என்ற பின்னணி கணக்கு இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இந்த இடத்தில் திருமா சொல்லி ஸ்டாலின் கேட்பாரா? என்ற கேள்வி எழலாம். தற்போது காங்கிரஸ் உடனான கூட்டணி கூட விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. மாவட்ட அளவில் இரு கட்சிகளிலும் முரண்பட்டு நிற்கும் தலைவர்களை பார்க்க முடிகிறது.
இவை விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில் காங்கிரஸ் உடனான நட்பு உடையலாம். கூட்டணி கணக்குகள் மாறலாம். அந்த சமயத்தில் கே.சி.ஆரின் மூன்றாவது அணி முன்னால் வந்து நிற்கும். திருமா சொன்னது நினைவுக்கு வரும். பாஜகவிற்கு எதிரான கே.சி.ஆரின் தேசிய அரசியலில் ஸ்டாலினும் கைகோர்க்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.