சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவரின் மனைவி புவனா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். குடும்ப வறுமை காரணமாகவும், கடன் காரணமாகவும் புவனா சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஏஜென்ட் மூலமாக துபாய்க்கு பணிக்குச் சென்றுள்ளார். ஒரு வீட்டில் பணிப்பெண் வேலைக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றுள்ளார்.
இந்த நிலையில், துபாயில் தனக்குச் சொன்ன சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தன்னை அந்த வீட்டின் உரிமையாளர் துன்புறுத்துவதாகவும் புவனா ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “கடன் அதிகம் இருப்பதால்தான் நான் இங்கு வேலைக்கு வந்தேன். காலை ஐந்து மணிக்கு வேலை செய்யத் தொடங்கினால், அடுத்த நாள் அதிகாலை ஒரு மணிவரை வேலை நீடிக்கிறது. என்னை பணிக்கு அனுப்பும்போது, கணவன் மனைவி, ஒரு குழந்தையைக் கவனிக்கும் வேலை என்றுதான் சொல்லியிருந்தார்கள்.
ஆனால், இங்கு 14-15 பேருக்கு வேலை செய்யவேண்டியுள்ளது. சிறிது நேரம் ஓய்வு எடுத்தாலும் வீட்டின் உரிமையாளர் என்னை அடித்துத் துன்புறுத்துகிறார். சொன்ன சம்பளமும் தரப்படவில்லை. நான் தங்குவதற்கு வீட்டின் கழிவறையில் இடம் கொடுத்திருக்கிறார்கள்” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். புவனா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தன்னை எப்படியாவது மீட்டு சென்னைக்கு அனுப்பிவைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு மத்திய, மாநில அரசுகள் தன்னை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், அவர் கோரிக்கைமீது நடவடிக்கை எடுக்கக் காலதாமதமாவதால் புவனாவின் குடும்பத்தார்கள் ஒரு தனியார் என்.ஜி.ஓ-வின் உதவியை நாடியிருக்கிறார்கள். தற்போது புவனா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அரசு அந்தப் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.