புதுடெல்லி: எவ்வித சமாதான முயற்சிக்கும் இந்தியா உதவ தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசிய போது உறுதியளித்தார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது போரை முடிவுக்கு கொண்டு வருதல், பேச்சுவார்த்தை தொடர்தல் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். இப்பிரச்னைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று இந்தியா உறுதியாக நம்புவதாக பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். எந்தவொரு சமாதான முயற்சிக்கும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் தெரிவித்தார். அமைதிக்கான எந்த முயற்சிக்கும் இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.