மதுரை: மதுரையில் மூன்று மாவடி முதல் அய்யர் பங்களா வரையிலான கன்னனேந்தல் நான்கு வழிச்சாலையில் நடுவில் 6 அடி ஆழத்திற்கு தடுப்புச் சுவர் இல்லாத மழைநீர் கால்வாய் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கூடல்நகர் வரை செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலை கடந்த காலத்தில் இரு வழிச்சாலையாக இருந்தபோது இந்த சாலையில் பரப்பான போக்குவரத்து இல்லை. அதன்பிறகு நெடுஞ்சாலைத்துறை 2019ம் ஆண்டு இந்த சாலையில் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்நிலையத்தில் இருந்து சர்வேயர் காலனி, மூன்று மாவடி, அய்யர் பங்களா வழியாக குலமங்கலம் சாலையை கடந்து ஆணையூர், கூடல்நகர் வரை 13 கி.மீ., தொலைவிற்கு ரூ.50 கோடியில் பிரமாண்டமான முறையில் நான்கு வழிச்சாலையாக அமைத்தது. இந்தச் சாலையில் ஆணையூரில் இருந்து கூடல் நகர் வரை சென்ற 2.5 கி.மீ. சாலை மட்டும் அகலமில்லாததால் இருக்கிற இடத்திலே 10 மீட்டர் அளவிலே இருவழிச்சாலையாக போடப்பட்டது.
இந்தச் சாலை அமைந்துள்ள இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாக இருப்பதால் அதன் கட்டுப்பாட்டிலே இந்தச் சாலை உள்ளது. ஆனால், சாலை பராமரிப்பை மட்டும் நெடுஞ்சாலைத்துறை செய்கிறது. மாட்டுத்தாவணி, சர்வேயர் காலனி, கே.புதூர், மூன்று மாவடி, அய்யர் பங்களா, தபால் தந்தி நகர், ஆணையர் பகுதியை சேர்ந்த மக்கள், வாகன ஓட்டிகள் எளிதாக பாத்திமா கல்லூரி ரவுண்டானா, பரவை, பை-பாஸ் சாலை மற்றும் திண்டுக்கல் செல்வதற்கு இந்தச் சாலையை பயன்படுத்தத் தொடங்கினர். அதன்பிறகு இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நான்கு வழிச்சாலையாக போடப்பட்ட இந்தச் சாலை, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்தச் சாலை போட்ட ஒன்றரை ஆண்டிற்குள்ளாவே கடந்த ஒரு ஆண்டாக மாநகராட்சி நிர்வாகம், பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குடிநீர் விநியோக குழாய் பதிக்கவும், பாதாளசாக்கடை குழாய் அமைக்கவும் இந்த சாலையை தோண்டிப்பட்டனர். தற்போது அந்தக் குழாய்கள் அமைத்து பல மாதமாகியும், தற்போது வரை இந்த சாலையை பொதுப்பணித்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் சீரமைக்கவில்லை. குழாய் பதிக்க நன்றாக இருந்த இந்தச் சாலை தோண்டிப்பட்டதால் இந்தச் சாலை மறுசீரமைப்பிற்கான இழப்பீட்டு தொகையை மாநகராட்சி நிர்வாகம்தான் வழங்க வேண்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இன்னும் அந்தத் தொகையை வழங்காததால் இந்த சாலை மறுசீரமைகக்கப்படாமலே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சாலையில் பள்ளம் தோண்டி மூடப்பட்ட பகுதியில் குண்டும், குழியுமாக சமதளமாக சாலை இல்லாததால் வாகனங்கள் செல்லாமல் சாலையின் தோண்டாத பகுதியில் மட்டுமே செல்கின்றன. அதனால், வாகன ஊர்ந்து செல்வதால் நகரின் மற்ற சாலைகளை போல் தற்போது இந்தச் சாலையும் நெரிசல் அதிகமான சாலையாக மாறிவிட்டது. இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் இந்த சாலையின் நடுவில் தடுப்புச் சுவரே இல்லாமல் உள்ள 6 அடி ஆழம் பாசனக் கால்வாய் வாகன ஓட்டிகளை மிரட்டுகிறது. இந்த சாலையில் மூன்று மாவடியில் இருந்து ஐரை கி.மீ., தொலைவிற்கு மட்டும் சாலையில் செல்வோர் கால்வாயில் விழாமல் இருக்க அதன் இருபுறமும் தடுப்பு கம்பி அமைத்துள்ளனர். அதன்பிறகு சாலையின் பெரும்பாலான பகுதியில் நடுவில் செல்லும் பாசனக் கால்வாய் தடுப்பு சுவர், கம்பி எதுவும் இல்லாமல் உள்ளது.
அதனால், ஆடு, மாடுகள் அடிக்கடி இந்தக் கால்வாயில் விழுந்து விடுகின்றன. இரவில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தெரியாமல் பள்ளத்தில் வாகனத்தைவிட்டு விடுகின்றனர். மிகவும் அபாயகரமான வகையில் தடுப்புச் சுவர் இல்லாமலே நடுவில் 6 அடி ஆழத்திற்கு பாசனக்கால்வாய் செல்லும் இந்தச் சாலை, தினமும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால், மாநகராட்சி நிர்வாகம் சாலையை தோண்டி போட்டதிற்கான இழப்பீட்டு தொகையை வழங்கிய பிறகு சாலையை மறுசீரமைப்பு செய்யும்போது நெடுஞ்சாலைத் துறையும், பொதுப்பணித் துறையும், இந்த சாலையின் நடுவில் செல்லும் பாசனக் கால்வாயின் இருபுறமும் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.