சீர்காழி சரஸ்வதி கோயில்: கல்வியறிவை வழங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் சரஸ்வதிவிளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யாநாயகி சமேத ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் வீற்றிருக்கும் பழைமை வாய்ந்த கோயிலில் சரஸ்வதிதேவி தனிச் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டித் தவமிருந்து அருள் பெற்றதாகத் தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர், ‘சரஸ்வதிவிளாகம்’ என்றழைக்கப்படுகிறது.

சரஸ்வதி பூஜை

சரஸ்வதிதேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமியும், அம்பாளும்,  ஸ்ரீவித்யாரண்யேஸ்வரர், ஸ்ரீவித்யாநாயகி என்ற திருநாமத்தோடு வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளுகின்றனர். இக்கோயிலில் சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, நவமி திதி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதிதேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு இன்று (5.10.2022) வித்யார்த்தி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதிதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாரனை நடைபெற்றன. பின்னர் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் தர்ப்பைப் புல்லில் தேனைத் தொட்டு மந்திரம் ஓதி குழந்தைகளின் நாவில் எழுதியும், தாம்பாளத்தில் பரப்பப்பட்ட அரிசியில்  குழந்தைகளைத் தமிழ் உயிரெழுத்துக்களை எழுத வைத்தும் வித்யாரம்பம் செய்து அருளாசி வழங்கப்பட்டது.

சரஸ்வதி பூஜை

வித்தியாரம்பம் விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ராஜாராமன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.