சென்னை: வெளிநாடுகளில் இருப்பதுபோல, வாகன நெரிசலை சரிசெய்ய சென்னையில் 312 சாலை சந்திப்புகளில் நவீன தொலைதூர கட்டுப் பாட்டு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. சாலைகளில் நிற்கும் வாகனங்களை துல்லியமாக கணக்கிட்டு சிவப்பு, பச்சை சிக்னலையும், விநாடி ஓட்டத்தையும் இந்த கருவியே கட்டுப்படுத்தும். சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது தொடர்கதையாக உள்ளது. நெரிசலை குறைக்க அண்ணா சாலை உட்பட பல்வேறுசாலைகளில் சில பகுதிகளை ஒருவழிப் பாதையாக போக்குவரத்து போலீஸார் மாற்றம் செய்துவருகின்றனர். ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, தொழில்
நுட்ப உதவியுடன் நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
‘கூகுள் மேப்’ மூலம் நெரிசலை கண்காணித்து, அப்பகுதிகளுக்கு போக்குவரத்து போலீஸார் விரைந்து சென்று, நெரிசலை சரிசெய்கின்றனர். இதற்காக வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராட்சத திரை அமைத்து, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அதன்படி, நெரிசலை பச்சை மற்றும் ஆரஞ்சு (சீரான வேகம்), சிவப்பு (நெரிசல்), அடர் சிவப்பு (கடும் நெரிசல்) என வகைப்படுத்தி அதற்கேற்ப, போக்குவரத்து போலீஸார் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர். அடுத்தகட்டமாக, வெளிநாடுகளில் இருப்பதுபோல, நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனங்கள் தடையின்றி விரைந்து செல்லவும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் உள்ள 312 சாலை சிக்னல்களில் தொலைதூர போக்குவரத்து கட்டுப்பாட்டு கருவிகள் நிறுவப்பட உள்ளன. மருத்துவ அவசர ஊர்திகள், விஐபிக்களின் வாகனங்கள், பிற அவசரகால வாகனங்களின் இயக்கத்தின்போதும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் போக்குவரத்தின் அளவை பொருத்து இக்கருவி இயங்கும்.
இதுகுறித்து கேட்டபோது, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் கூறியதாவது: சாலை சிக்னல்களில் தொலைதூர கட்டுப்பாட்டு கருவி விரைவில் பொருத்தப்பட உள்ளது. சாலையில் ஒருபுறம் நெரிசல், மறுபுறம் குறைந்த நெரிசல் அல்லது வெறிச்சோடி காணப்பட்டால், இந்த கருவி தானாகவே இயங்கி பச்சை அல்லது சிவப்பு சிக்னல் நேரத்தை கட்டுப்படுத்தும். சிக்னல் கம்பத்தில் பொருத்தப்படும் சென்சார் கருவி, சாலைகளில் நிற்கும் வாகனங்களை துல்லியமாக கணக்கிட்டு, சிக்னல்களில் விநாடி ஓட்டத்தை உடனுக்குடன் மாற்றுவதோடு, தேவைக்கு ஏற்ப, மஞ்சள், பச்சை, சிவப்பு விளக்கை எரியச் செய்யும். இதற்கு போக்குவரத்து போலீஸாரின் உதவி, வழிகாட்டுதல் தேவை இல்லை. இதனால், வாகனங்கள் தேங்காமல் சீராக செல்லும். இந்தக் கருவியை நிறுவ தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புகார் தெரிவிக்கலாம்: போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து வாட்ஸ்அப் (9003130103), இன்ஸ்டாகிராம் (chennaitrafficpolice), ட்விட்டர் (@ChennaiTraffic), முகநூல் (greaterchennaitrpolice) ஆகிய சமூக வலைதள பக்கங்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அடுத்த 5 நிமிடத்தில் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, புகார் அளித்தவர்களுக்கு அது பற்றிய தகவலும் தெரிவிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.