சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி: நாடு முழுவதும் 115 இடங்களில் சோதனை

டெல்லி: இந்தியாவில் பதுங்கி சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் சைபர் கிரைம் கும்பலை பிடிக்க பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 115 இடங்களில் நடந்த சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகம் முழுவதும் மோசடிகளை அரங்கேற்றும் சைபர் கிரைம் கும்பல் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுக்கு கடும் சவாலாக உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களும் விதவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு நாட்டில் இருந்துகொண்டு மற்றோரு நாட்டில் உள்ளவர்களை மோசடி வலையில் வீழ்த்தி பெரும் அளவில் பணத்தை சுருட்டும் சைபர் கிரைம் கும்பல் மீது பன்னாட்டு புலனாய்வு அமைப்புடன் இணைந்து சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் இந்தியாவில் பதுங்கியிருந்து சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் பன்னாட்டு சைபர் கும்பலுக்கு எதிராக சிபிஐ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இண்டர்போல் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தனியார் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ மேற்கொண்ட இந்த வேட்டைக்கு ஆபரேஷன் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவு உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடைபெற்றது. இந்தியாவில் உள்ள சர்வதேச கும்பல்களின் உள்கட்டமைப்பை சிதைத்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதை நோக்கமாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

இது இணைய குற்றங்களுக்கு எதிரான ஒரு ஒருங்கிணைப்பு நடவடிக்கை என்றும் அது முக்கிய மைல்கல்லை எட்டி இருப்பதாகவும், சிபிஐ தெரிவித்துள்ளது. சுமார் 115 இடங்களில் சோதனை நடந்து வருவதாக தெரிவித்த சிபிஐ இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அவர்களிடம் இருந்து 1.8 கோடி ரூபாய் ரொக்கம், 1.5 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புனே மற்றும் அகமதாபாத்தில் செயல்பட்ட 2 கால்செண்டர்களும் சிபிஐயால் கண்டுபிடிக்கப்பட்டது. பலரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதோடு கைதானவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப், உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் எந்தெந்த நாடுகளில் பதுங்கி சர்வதேச அளவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை கண்டறிந்து அதன் அடிப்படையில் சர்வதேச கூட்டு நடவடிக்கையை தொடர சிபிஐ முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மூலம் உலக அளவில் நாள்தொறும் 1 லட்சம் பேருக்கு 9000 பேர் வீதம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் ஆண்டு தோறும் 71.1 மில்லியன் பேர் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் இழக்கும் தொகையின் சுமார் 318 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.