சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன், சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அடுத்தடுத்து அரசு விடுமுறை விட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. கூடுதல் மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அதன்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயங்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 744 பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து மட்டும் இரண்டு நாட்களில் சுமார் 3,500க்கும்மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில், சுமார் 2.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பிற ஊர்களில் இருந்தும் 1,650 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. நாளை வேலை நாள் என்பதாலும், காலாண்டு விடுமுறை முடிந்து வருகிற 10ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது என்பதாலும், பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக 1,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.