நெல்லை: நெல்லை டவுன் சத்திய மூர்த்தி தெருவில் இருந்து நயினார்குளம் சாலைக்கு செல்லும் பாதை கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து சாலைகள் சீரமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக சாலை ஓரங்களில் உள்ள கழிவுநீர் ஓடைகளை முழுவதுமாக அகற்றி விட்டு புதிய கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, நயினார்குளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது. இதில் நெல்லை டவுன் வடக்குரத வீதியில் இருந்து சந்திப்பு பகுதிக்கு செல்ல நேராக கிழக்கு நோக்கி வந்து சத்தியமூர்த்தி தெரு வழியாக நெல்லையப்பர் கோயில் வெளி தெப்பக்குளம் திருப்பத்தில் திரும்பி நயினார்குளம் காய்கறி மார்க்கெட், சந்திப்பு பகுதிக்கு வரும் வகையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த பாதையில் குறுக்காக கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளது.
இதனால் இவ்வழியாக வரும் வாகனங்கள் ஏற்கனவே நெருக்கடியான லாலா சத்திரமுக்கு பகுதிக்கு சென்று நயினார்குளம் சாலையில் பயணித்து ராமையன்பட்டி, தச்சநல்லூர், சந்திப்பு மற்றும் காய்கறி மார்க்கெட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ரதவீதிகளில் வாகன நெருக்கடியை தவிர்க்க இவ்வழியை பயன்படுத்துவர். எனவே கழிவுநீர் ஓடை பணியை முடித்து சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.