தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் தனுஷின் படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கோவிட் சமயத்தில் தனுஷின் சில படங்கள் தொடர்ந்து ஓடிடிகளில் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது, அதனை தொடர்ந்து செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான ‘நானே வருவேன்’ படத்தை ரசிகர்கள் பலரும் திரையில் காண காத்துகொண்டு இருந்தனர். கடந்த செப்டம்பர்-29ம் தேதி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்தது, சைக்கோ த்ரில்லர் படமான பாக்ஸ் ஆபிசில் ரூ.25 கோடி வசூல் செய்தது.
இதனையடுத்து நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் பணிகளில் பிஸியாகிவிட்டார், இதற்கென தென்காசியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைந்து அடுத்த திட்டத்தில் பணிபுரியவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஃபிடா, லவ் ஸ்டோரி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சேகர் கம்முலா மூன்று மொழிகளில் திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, இந்த படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்து ட்விட்டரில் தயாரிப்பாளர்கள் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் உருவாகிறது என்றும் தற்போது இந்த படம் ‘புரொடக்ஷன் நம்பர்.4’ என்று அழைக்கப்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது நடிகர் தனுஷ், வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள இருமொழித்திரைப்படமான ‘வாத்தி’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இப்படம் இந்த ஆண்டு டிசம்பர்-2ம் தேதி வெளியாகவுள்ளது.