கர்நாடக சிங்கம்:
என்னதான் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வந்தாலும், மத்தியிலும் அதிகாரத்தில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் இன்னமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர முடியவில்லை என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்த ஆதங்கம் கட்சி மேலிடத்துக்கு்ம் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த வருத்தத்தை போக்கும் நோக்கில்தான் துடிப்பான ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த, கர்நாடக சிங்கம் என்று பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அண்ணாமலை, தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஸ்டாலினுக்கு தலைவலி:
கட்சியின் தலைவர் பொறுப்பை அவர் ஏற்று 15 மாதங்கள்தான் ஆகின்றன. இந்த குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி அதிமுகவா? இல்லை பாஜகவா? என்று கேட்கும் அளவுக்கு ஆளும் திமுகவின் ஆட்சி, நிர்வாகத்தில் உள்ள குறைகளை, குளறுபடிகளை சுட்டிக்காட்டி, தமது விமர்சன கணைகளால் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ஸ்டாலினை தாக்கி வருகிறார்.
அது கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் ஊட்டசத்து பெட்டகத்துக்கான டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக சில மாதங்களுக்கு முன் இவர் கிளப்பிய குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி… பொங்கல் இலலச பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கே, ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் ஆர்டர் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு மீது அண்மையில் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி…
அடடா.. சரியான லிஷயமா இருக்கே… இது எப்படி நமக்கு முன்கூட்டியே தெரியாம போச்சு என்று அதிமுக, பாமக போன்ற எதிர்க்கட்சிகளே ஆதங்கப்படும் அளவுக்கு ஆளும் திமுகவை உண்டு, இல்லை என்று செய்வதில் அண்ணாமலையை கில்லி என்றுதான் சொல்ல வேண்டும்.
எகிறும் கிராஃப்:
இந்துகள் குறித்து மனு தர்மத்தில் மிகவும் கீழ்த்தரமாக செொல்லப்பட்டுள்ளதாக திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் பேசிய பேச்சு தமிழக அரசியலை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு, ‘பெரியார் தமது மரண சாசனத்தின் 21 ஆம் பக்கத்தில் திமுக மற்றும் திமுகவினர் குறி்த்து கூறியிருக்கும் கருத்துகள் பற்றியும் ஆ.ராசா பேச வேண்டும்’ என்று அண்ணாமலை பதிலடி கொடுத்தது பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அவரின் கிராஃப்பை எகிற செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படி ஆளும் திமுகவை கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீிதியாகவும் அண்ணாமலை வெளுத்து வாங்கி வருகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் பராக்கிரமாக உணர்ந்து வரும் நிலையில்தான் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை விரைவில் மாற்றும் முடிவுக்கு பாஜக மேலிடம் வந்துவிட்டதாக கூறப்படுவதுதான் அந்த அதிர்ச்சி தகவல்.
எதிர்மறை விமர்சனம்:
கட்சியில் உள்ள சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அண்ணாமலை மீது தொடர்ந்து இருந்து வருகிறது. அத்துடன் தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகலாம், 2024 இல் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம் என்று பூச்சாண்டி காட்டுவது என அண்ணாமலை மீது வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களால் அவரை கட்சியின் டெல்லி மேலிடம் வாய்சொல் வீரராகவே பார்ப்பதாகவும், கட்சியின் மாநில தலைமை இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் இப்போதைக்கு தாமரை மலர வாய்ப்பில்லை என்பதால் அண்ணாமலையை மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தாமரை கட்சியின் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடி கோபம்:
இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக,, மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் சென்னை வந்திருந்தார். நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்த அரசு விழாவில் பிரதமரை வைத்து கொண்டே, முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி, ஜிஎஸ்டி வரி என கெத்தாக பேசியதன் விளைவாக, மோடி அண்ணாமலை மீது அதிருப்தி அடைந்ததாகவும், அந்த கசப்பான நிகழ்வும் தற்போது கட்சியின் மாநில தலைமையை மாற்றி விடலாம் என்ற முடிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.
வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு:
சரி… அண்ணாமலையை மாற்றிவிட்டு அந்த இடத்துக்கு யாரை கொண்டு வரப் போகிறார்கள் என்று கேட்டால், வானதி சீனிவாசனும், பேராசிரியர் மதுரை சீனிவாசனும் தலைவர் பதவி ரேசில் இருக்கிறார்களாம். இவர்களில் இபிஎஸ், வேலுமணி என கொங்கு மண்டல அதிமுக பெரிய தலைகளுடன் நட்பு பாராட்டி வருபவர் என்ற முறையில், வானதி சீனிவாசனை பாஜகவின் மாநில தலைவராக்கினால், அதிமுகவை பாஜகவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலும் என்று மேலிடத்தில் எடுத்து சொல்லப்பட்டு வருவதால் அனேகமாக தமிழக பாஜகவின் அடுத்த தலைவராகும் அதிர்ஷ்டம் வானதி சீனிவாசனுக்கு இருப்பதாக சொல்கின்றனர் விவரமறிந்த தாமரை கட்சியினர்.