சென்னை: மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தனர். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும்
மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மியான்மரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது.
இதன்பயனாக, மியான்மரில் சிக்கித் தவித்த 14 பேர், தாய்லாந்தில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர். இதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் பேசியவர், மியான்மரில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றார்.
அதேநேரம் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய 13 பேரில் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “துபாயில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தோம். துபாய் ஏஜென்ட் தாய்லாந்தில் வேலை இருக்கிறது என்றுகூறி அழைத்துச் சென்றார். ஆனால், நாங்கள் அங்கு சென்றபிறகு வேலை இல்லை என்று தெரிவித்ததோடு, 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து, ஒரு சீன மக்கள் குழு எங்களை சட்டவிரோதமாக ஒரு ஆற்றைக் கடக்கச் செய்தது.
அவர்கள் எங்கள் தொலைபேசிகளை எடுத்துச் சென்றனர். இதன்பின்னரே நாங்கள் மியான்மரில் இருப்பது தெரியவந்தது. எங்களிடம் விசா இல்லை. சட்டவிரோதமாக அங்கு இருந்தோம். இந்தத் தகவலை போலி ஐடிகள் மூலம் வலைதளங்களில் இங்குள்ளவர்களுக்கு தெரிவித்தோம். என்றாலும், அதற்குள்ளாக உள்ளூர் ராணுவம் எங்களை காப்பாற்றியது. எனினும், அதற்கு முன்னதாக, நாங்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டோம்; ஒரு நாளைக்கு 15-16 மணி நேரம் வேலை செய்ய பணிக்கப்பட்டோம்” என்று அங்கு நடந்த சித்திரவதைகளை உருக்கமாக வெளிப்படுத்தினார்.