வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துபாய்-ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கம்பீரமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இங்கு, அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இது மகிழ்ச்சியான செய்தி என இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் அனைத்து மதத்தினருக்கும் தனித் தனி வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு, ஏற்கனவே ஏழு தேவாலயங்கள், குரு நானக் தர்பார் சீக்கிய குருத்வாரா ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த பகுதி வழிபாட்டு கிராமம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு பிரமாண்டமான ஹிந்து கோவில் அமைப்பதற்கு, 2020 பிப்ரவரியில் பூமி பூஜை நடத்தப்பட்டது. கொரோனா காலத்திலும் கட்டுமான பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, எமிரேட்ஸ் அரசு போதிய ஆதரவு அளித்தது.
இந்த பிரமாண்ட கோவில் கட்டுமான பணிகள் முடிந்து, நேற்று மேள தாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க கோவில் திறக்கப்பட்டது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் ஷேக் நயன் பின் முபாரக் அலி, கோவிலை திறந்து வைத்தார். அந்த நாட்டுக்கான இந்திய துாதர் சஞ்சய் சுதிர் துவக்க விழாவில் பங்கேற்றார். இதில், பல்வேறு நாடுகளின் துாதரக அதிகாரிகள், மத அமைப்புகளின் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இங்கு சிவன், விஷ்ணு உட்பட, 16 கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோவில் இந்திய, அரேபிய கட்டுமான கலை அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது, 80 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் உட்புறம் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளன. பிரார்த்தனை கூடத்தில் இளம் சிவப்பு நிறத்திலான தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதன் வாயிலாக, இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது’ எனக் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து, இந்திய துாதர் சஞ்சய் சுதிர் கூறியதாவது:துபாயில் ஹிந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது, இந்திய வம்சாவளியினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. இங்கு வசிக்கும் இந்தியர்களின் வழிபாட்டு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இந்த கோவில் கட்டப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement