குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நவராத்திரி கர்பா நிகழ்ச்சியில் கற்களை வீசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட சில இஸ்லாமிய நபர்களை காவல்துறை அதிகாரிகள் கம்பத்தில் கட்டி பிரம்புகளால் தடியடி நடத்திய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் காவல்துறையின் செயலை குறித்து காவல்துறை தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
குஜராத்தின் உள்ளூர் செய்தி நிறுவமனான விடிவி ஊடகம், ’ கேடா மாவட்டத்தில் உந்தேலா கிராமத்தில் பொதுமக்கள் முன்னணிலையில், 10 – 11 இஸ்லாமிய நபர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை அங்கிருந்த மக்களும் கைத்தட்டி ஆராவரத்துடன் பார்த்தனர் ‘ என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ குஜராத்தில் கர்பா நிகழ்வின் போது 150 பேர் கொண்ட கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 43 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 13 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆரின் படி, அந்த கோவிலுக்கு அருகில் மசூதி உள்ளதால் அங்கு கர்பா நிகழ்ச்சி நடத்துவதை அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்த்து வந்தனர் என தெரிகிறது. அதனால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
கெடா காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், “நவராத்திரி கர்பா நிகழ்ச்சிக்குள் இரண்டு முஸ்லீம் ஆண்கள் தலைமையிலான குழுவினர் நுழைந்து பிரச்சனையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து அந்த கும்பலில் 13 பேரைக் கைது செய்துள்ளோம்” என்றார்.
இருப்பினும், விசாரணையோ கைதியோ அல்லது நிருப்பிக்கப்பட்ட குற்றவாளியோ அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் வைத்து இவ்வாறு தடியடி நடத்தியிருப்பது சட்டவிரோதமானது எனவும் வேற்று மதத்தினர் என்ற காரணத்துக்காக காவல்துறையின் இந்த செயலை சுற்றியிருந்த மக்கள் ஆதரவு தெரிவிப்பது சமூகத்துக்கு ஆரோக்கியமானது இல்லை என்றும் பலரும் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உள்ளூர் ஊடகமான விடிவி வெளியிட்ட செய்தி:
VIDEO: પથ્થરમારાના આરોપીઓને થાંભલા સાથે જકડી ખેડા પોલીસે જાહેરમાં દંડા ફટકાર્યા, ગ્રામજનોએ તાળીઓ પાડી#police #vtvgujarati pic.twitter.com/hTCm2Ld5sZ
— VTV Gujarati News and Beyond (@VtvGujarati) October 4, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM