நாடாளுமன்ற நிலைக்குழு மாற்றியமைப்பு; காங்கிரசிடம் இருந்த 2 தலைவர் பதவி பறிபோனது: திரிணாமுலுக்கு எந்தக் குழுவின் தலைவர் பதவியும் இல்லை

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுவில் காங்கிரசிடம் இருந்த 2 தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் குழுவின் தலைவர் பதவியும் அளிக்கப்படவில்லை. பெரும்பாலான நிலைக்குழு தலைவர் பதவிகள் பாஜகவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுக்களானது, நாடாளுமன்றத்தின் அமைப்பு, அதிகாரம், சட்டமியற்றுவதற்கான உதவி, நிதி சம்பந்தமான ஆய்வு ஆகியவற்றை ஆராய்கின்றன.

ஒவ்வொரு நிலைக்குழுவிலும் மக்களவை உறுப்பினர் 30 பேர், மாநிலங்களவை உறுப்பினர் 15 பேர் என 45 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு நிலைக்குழுவும் ஓராண்டு இருக்கும். பதினோரு நிலைக்குழுத் தலைவர்களை மக்களவைத் தலைவரும், ஆறு நிலைக்குழுத் தலைவர்களை மாநிலங்களவைத் தலைவரும் நியமிக்கின்றனர். இந்நிலையில் இந்தாண்டுக்கான நிலைக்குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.

அதேநேரம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு, எந்தக் குழுவின் தலைவர் பதவியும் கிடைக்கவில்லை. ஏற்கனவே உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பதவி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டது. தற்போதைய மாற்றங்களின்படி, உள்துறை, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, வெளிவிவகாரம், நிதி மற்றும் சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்றக் குழுக்கள் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைமையில் உள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜகவின் ராஜ்யசபா எம்பி பிரிஜ் லால் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக பாஜக மக்களவை எம்பி ராதா மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா எம்பி தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் நாடாளுமன்ற நிலைக்குழுவில் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.