நெருங்கும் கொடநாடு கிளைமாக்ஸ்… எடப்பாடிக்கு சிக்கலா? அதிமுகவில் நடக்கும் ட்விஸ்ட்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டு

மற்றும்

தலைமையில் இரு அணிகளாக மோதிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு தலைவலியாக நீடித்து வருவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. ஜெயலலிதாவின் இரண்டாம் தாய் வீடு என்று அழைக்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

இதன் விசாரணை கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், குட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்ததால் விஷயம் பரபரப்பானது. இதுதொடர்பான வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் விசாரணை தீவிரமடைந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்.

இதில் ஏற்கனவே நடந்த விசாரணைகள் சேர்க்கப்படும். அதுமட்டுமின்றி புதிதாக நடத்தப்படும் விசாரணை விவரங்களும் இடம்பெறும். அடுத்து புதிதாக ஒரு குற்றவாளிகளின் பட்டியல் உருவாக்கப்படும். ஏற்கனவே வெளியிடப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் சயான் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் புதிய குற்றவாளிகளின் பட்டியலில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது நெருங்கிய ஆதரவாளரான சேலம் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்பாராத திருப்பங்கள் கூட வரலாம் என்று சொல்லப்படுகிறது. இதுதவிர சாட்சியங்களிடம் இருக்கும் முரண்பாடுகளை தீர்க்கும் நடவடிக்கைகள் சிபிசிஐடி போலீசாரால் மேற்கொள்ளப்படும். எனவே சிபிசிஐடி விசாரணையின் முடிவில் எழுதப்படும் எஃப்.ஐ.ஆர் தான் விரிவான அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.

கொடநாடு வழக்கின் விசாரணையின் முடிவு என்பது அதிமுகவில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடும். அக்கட்சியின் தலையெழுத்தையே மாற்றி எழுதவும் வாய்ப்புண்டு. தற்போது அதிமுகவில் நடந்து வரும் உட்கட்சி பூசலுக்கு கொடநாடு வழக்கின் தீர்ப்பு கூட ஒரு தீர்வை தரலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த வழக்கு தொடர்பாக அடுத்த சில வாரங்களில் சிபிசிஐடி தரப்பில் இருந்து முக்கியத் தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.