`பணக் கஷ்டம்… விவாகரத்து நோட்டீஸ்' – 'மர்மதேசம்' லோகேஷ் தற்கொலை குறித்து அவரின் தந்தை வேதனை!

‘மர்மதேசம்’ தொடரில் ராசுவாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லோகேஷ். இயக்குனராக வேண்டும் என்கிற கனவுடன் பயணித்தவர் அந்த கனவை எட்டிப் பிடிக்கும் முன்பே தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்ட சூழலில் அவருடைய நண்பர்களிடம் இது குறித்து விசாரித்தோம்.

‘மர்மதேசம்’ டீம்

சமீபத்தில் லோகேஷூக்கு உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அப்ப கூட பண உதவி கேட்டு தன்னுடன் நடித்த பல நடிகர்களுக்கு ஃபோன் பண்ணிப் பேசியிருக்கான். அவங்களும் அவங்களால முடிஞ்ச உதவியை செய்திருக்காங்க. வேலை வேணும்னும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியலைன்னும் லோகேஷ் பலரிடம் புலம்பியிருக்கான். அவனுக்காக அசிஸ்டண்ட் டைரக்டர் வேலையெல்லாமும் கூட ஏற்பாடு செய்து கொடுத்திருக்காங்க.

25 வருட `மர்மதேசம்’ கொண்டாட்டத்தில் கூட இயல்பாவே எல்லாரிடமும் பேசியிருக்கான். எப்பவும் போல நார்மலாகத்தான் பேசி சிரிச்சிட்டு இருந்திருக்கான். அதனால அவன் மனதளவில் உடைஞ்சு போயிருக்கான் என்கிற விஷயம் யாருக்குமே தெரியாம போச்சு.

‘மர்மதேசம்’ லோகேஷ்

அவனுடைய அப்பா, அம்மா, மனைவி, குழந்தைன்னு யாருமே அவன் கூட இல்லைங்கிற மாதிரியான தகவல்களும் கேள்விபட்டோம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல மருந்து குடிச்சிட்டு சுயநலமில்லாம இருந்திருக்கான். அவனை மீட்டு போலீஸ் தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்காங்க. அங்க உயிர் பிரிஞ்சிருக்கு. ரொம்ப சின்ன வயசு. இந்த வயசுல இப்படியொரு முடிவை எடுப்பான்னு யாருமே நினைச்சு கூட பார்க்கல. 

மருத்துவமனைக்கு அவனுடைய அப்பா வந்து பார்த்திருக்காரு என்கிற தகவலும் கிடைச்சது. பண உதவி கேட்டு பலர்கிட்ட பேசினதே அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை நிச்சயம் கொடுத்திருக்கும். இதுதான் மீடியாக்காரங்களோட வாழ்க்கை!

‘மர்மதேசம்’ லோகேஷ்

இயக்குனர் நாகா சார்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் மறுப்பு சொல்லாம கேட்பான். அவரும், இவன் பெரிய இடத்துக்கு நிச்சயம் போவான்னு நம்பிட்டு இருந்தார். அவன் இல்லைங்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு.

மீடியாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னோட கனவை நினைவாக்க போராடினவனுக்கு இப்படியொரு முடிவு வந்திருக்க வேண்டாம்!’ என வேதனையுடன் தெரிவித்தனர். லோகேஷின் தற்கொலை குறித்து அவரின் தந்தை இராஜேந்திரன் கூறுகையில்,

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்திற்கு மனைவி நோட்டீஸ் அனுப்பி நிலையில், மன உளைச்சலில் இருந்தான். கடந்த 2011ம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் மாடம்பாக்கத்தில் லோகேஷ் வசித்து வந்தார்.

நான் வில்லிவாக்கத்தில் வசித்து வரும் நிலையில், திருமணத்திற்கு பின் லோகேஷ் தன்னுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டான். இதுவரை இருமுறை மட்டுமே தன்னை சந்தித்துள்ளார்.

‘விடாது கருப்பு’ லோகேஷ்

இறுதியாக கடந்த சனிக்கிழமை தன்னை சந்திக்க வந்த லோகேஷ், தன்னிடம் பணம் வேண்டும் என கேட்டுப் பெற்றுச் சென்றார். எங்கு சென்றார் என்பது பற்றி தனக்கு தெரியாது.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை குறித்து தனக்கு தெரியாது. விவாகரத்து குறித்து நோட்டீஸ் வந்த பிறகே கடந்த 6 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்வது பற்றி தனக்கு தெரிந்தது.

கடந்த திங்கட்கிழமை போலீசார் தகவல் தெரிவித்த பிறகே லோகேஷ் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு தெரியவந்தது.

எம்.ஆர் ராதாவினுடைய தம்பி மகன் நான். ஆனால் மிகப்பெரும் நடிகரின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்றில்லாமல் சொந்த முயற்சியில் எனது மகனை நடிப்பில் முன்னேற வைத்தேன்.

சிகிச்சை பலனின்றி நேற்று லோகேஷ் உயிரிழந்த நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை பெற்றுச் செல்ல மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன். உடலை கொடுத்த பின் வில்லிவாக்கம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல உள்ளேன்.

லோகேஷின் மனைவி அனிஷா நேற்று பார்வையாளர் போல் வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டார். மேலும், உடல் தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.