மும்பை: பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட் நீதிபதி என்.ஜே.ஜம்தார் நேற்று உத்தரவிட்டார். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத் துறை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு வசதியாக இந்த தீர்ப்பை 13ம் தேதிவரை அமல் செய்யக் கூடாது என்றும் நீதிபதி தடை விதித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். இவர் தேசிவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அப்போது அனில் தேஷ்முக் மீது மாஜி போலீஸ் கமிஷனர் பரம் பீர்சிங் ₹100 கோடி ஊழல் புகார் கூறினார். இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் சிபிஐ, அனில் தேஷ்முக் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இதனை தொடர்ந்து அனில் தேஷ்முக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே சிபிஐ தாக்கல் செய்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அனில் தேஷ்முக் மீது பணபரிவர்த்தனை மோசடி குறித்து தனியாக எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அனில் தேஷ்முக், அவருடைய உதவியாளர்களான குந்தன் ஷிண்டே, சஞ்சீவ் பாலாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அனில் தேஷ்முக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது 3 பேரும்நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மூன்று பேரும் ஜாமீன் கோரி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அனில் தேஷ் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இதன் பின்னர் ஜாமீன் கோரி கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அனில் தேஷ்முக் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஐகோர்ட் நீதிபதி என்.ஜே.ஜமதாரின் விசாரைணையில் உள்ளது. ஆனால் இந்த மனு மீதான விசாரணை இன்னமும் முடியவில்லை. இந்த நிலையில் தனது மனு மீது விரைந்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குமாறு மும்பை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட கோரி அனில் தேஷ்முக் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது கடந்த வாரம் திங்கள் கிழமை நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட் மற்றும் ஹீமா கோலி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தி அனில் தேஷ்முக்கின் மனு மீது உடனடியாக விசாரணை நடத்தி விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று மும்பை ஐகோர்டுக்கு உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து மும்பை ஐகோர்ட் நீதிபதி அனில் தேஷ்முக்கின் ஜாமீன் மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்தினார். நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது: அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்த போது பல்வேறு பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் ₹4.70 கோடி வசூல் செய்து நாக்பூரில் இருக்கும் சாய் ஷிக்ஷான் சன்ஸ்தான் என்ற கல்வி அறக்கட்டளையின் கணக்கில் முறைகேடாக டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளை அனில் தேஷ்முக்கின் குடும்பத்திற்கு சொந்தமானது. இந்த அறக்கட்டளை கணக்கில் 3 முறை மோசடியாக பணம் டெபாசிட் செய்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் 2 முறை மோசடி நடக்கவில்லை.
மாஜி போலீஸ் அதிகாரி சச்சின் வாஷே கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் 3வது முறையாக மேற்கொள்ளப்பட்ட டெபாசிட்தான் மோசடியாக நடந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது பற்றிய விசாரணையின் பலன் அனில் தேஷ்முக்கிற்கு சாதகமாக உள்ளது. மேலும் பணபரிவர்த்தனை மோசடி சட்டத்தின் 45வது பிரிவின் படி குற்றம்சாட்டப்பட்டவர் பெண்ணாக அல்லது வயதான ஆணாக இருந்தால் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்வது பற்றி நீதிபதி ஆலோசிக்கலாம். இதன் அடிப்படையில் அனில் தேஷ்முக்கை ₹1 லட்சம் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிடுகிறேன்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அனில் தேஷ்முக் சாட்சிகளை மிரட்டவோ ஆதாரங்களை அழிக்கவோ முயற்சி செய்யக் கூடாது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத் துறை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு வசதியாக தீர்ப்பை 13ம் தேதிவரை அமல் செய்யக் கூடாது என்றும் தீர்ப்பளிக்கிறேன். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.