ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சுமார் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும், மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மர்ம நபர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதமும் நடைபெற்றது. இப்போது போன்றே அப்போதும், ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் பேசிய மர்ம நபர் தன்னை பயங்கரவாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அடுத்தடுத்து 4 முறை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து, டிபி மார்க் போலீஸ் ஸ்டேஷனில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று தெரியவந்தது. அதே போன்று தற்போதும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
newstm.in