பால் பாயிண்ட் பேனாக்கள் வரவால் சாத்தூரில் சரிந்த பேனா நிப்புத் தொழில்: ஒன்றிய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை

சாத்தூர்: சாத்தூரில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பேனா நிப்புத் தொழில், பால் பாயிண்ட் பேனாக்களின் வரவால் தற்போது வாழ்வாதாரத்துக்கு போராடி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் மானியக் கடன்கள் வழங்கி தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் முக்கியத் தொழிலாக சேவு தயாரித்தல், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் ஆகியவை உள்ளன. இதுதவிர பேனாவுக்கு நிப்புத் தயாரிக்கும் தொழிலும் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். ஆனால், இன்று கால மாற்றத்தால் பேனா நிப்புக் கம்பெனி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரம் பெரும் போராட்டமாக உள்ளது. நிப்புத் தொழில் தொடங்கிய வரலாறு: சாத்தூரில் கடந்த 1950ம் ஆண்டில் ராஜகோபாலன் என்பவர் முதன்முதலில் நிப்புத் தொழிலை தொடங்கினார். முதலில் பித்தளையில் பேனா நிப்புகளை தயாரித்தார். இதனால், உற்பத்திச் செலவுகள் அதிகமாகியதால், சேலம் உருக்காலையிலிருந்து கழிவுத் தகடுகளை வாங்கிக்கொண்டு வந்து, அவற்றில் நிப்புத் தயாரித்தார். இவர், தொழிலில் வெற்றியடைந்ததைப் பார்த்து, அழகர்சாமி என்பவரும் நிப்புத் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். இவருடன் அவரது புதல்வர் மனோகரன், அவரது சகோதரர் வரதராஜன் ஆகியோர் இணைந்து தொழிலை வேகமாக முன்னெடுத்து சென்றனர்.

சுத்தியல் மற்றும் வெட்டிரும்பால் தகடுகளை வெட்டி, நிப்புத் தயாரித்த நிலையை மாற்றி, கையால் இயக்கக்கூடிய இயந்திரத்தையும் உருவாக்கி, அதன் மூலமாக நிப்புகள் தயாரிப்பை அதிகரித்தனர். ராஜஸ்தானில் உள்ள நிப்பு வியாபாரி ஒருவருடன் தொடர்பை உருவாக்கி, அவருக்கு தாங்கள் தயாரிக்கிற நிப்புகளை விற்பனை செய்தனர். அந்த வியாபாரி நிப்புகளை இந்தியா அளவில் சந்தைப் படுத்தினார்.

விரிவடைந்த நிப்புத் தொழில்
தொழிலில் நல்ல வருமானம் இருப்பது தெரியவே, ராஜகோபால் மற்றும் அழகர்சாமி ஆகியோரிடம் வேலை பார்த்து வந்த பெரும்பாலான தொழிலாளர்கள், தனித்தனியாக நிப்புத் தயாரிக்கிற தொழிலைத் தொடங்கினர். இதனால், நிப்புக் கம்பெனிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. பின்னர் 1975 முதல் 1985 வரை பத்தாண்டுக் கால இடைவெளியில் மொத்தம் 150 நிப்புக் கம்பெனிகள் சாத்தூரில் உருவாகின. இந்த கம்பெனிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூலித்தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். இந்த பத்தாண்டு காலம் நிப்புத் தொழிலின் பொற்காலம் என கருதப்படுகிறது. ஒருபக்கம் நிப்புக் கம்பெனிகளின் உரிமையாளர்களுக்கு நாளுக்கு நாள் வருமானம் கூடிக்கொண்டே வந்தது. மற்றொரு பக்கம் தொழிலாளர்கள் கையிலும் குறைவின்றி பணப்புழக்கம் ஏற்பட்டது.

நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்ட் முறை வேலை பார்த்தனர். தினசரி ரூ.500 வரை பெற்றனர். தொழில் துவங்கிய காலங்களில் 144 எண்ணிக்கை கொண்ட ஒரு குரோஸ் நிப்பு தயாரிக்க 25 பைசா என கூலி நிர்ணயம் செய்யபட்டது. இந்த கூலி அடுத்தடுத்த காலக்கட்டங்களில் ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய், இரண்டு ரூபாய் என உயர்ந்ததுடன், இதில் ஈடுபட்ட மதிப்புமிக்கத் தொழிலாளர்கள் தினசரி 35 முதல் 40 குரோஸ் வரை நிப்புகளை தயாரித்தனர். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வாரம் ஒரு முறை கூலி தந்தது. இப்பகுதியில் நடந்த சேவு தயாரிப்பு மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு இணையான தொழிலாக நிப்பு தொழில் மாறியது. மக்கள் மத்தியில் தாராளமாக பணப் புழக்கம் உண்டானது. இதனால், நகரில் ஏராளமான பெட்டிக் கடைகள், ஜவுளிக்கடைகள், ஒட்டல்கள் என வேறு தொழில்களின் வளர்ச்சியும், தனி மனிதப் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்தது.

பால் பாயிண்ட் பேனாக்களின் வரவால் சரிந்த தொழில்
1990ம் ஆண்டில் பால் பாயிண்ட் பேனாக்கள் அறிமுகம் ஆயின. கருப்பு, பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்களில் சட்டைப் பைகளை பால் பாயிண்ட் பேனாக்கள் அலங்கரிக்கத் தொடங்கின. இதனால், மை பேனாக்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் குறைந்தது. நிப்புத் தொழிலும் சரிவடையத் தொடங்கியது. 200க்கும் மேற்பட்ட நிப்பு கம்பெனிகள் செயல்பட்டு வந்த சாத்தூரில் 150, 100, 50 என படிப்படியாக நிப்புக் கம்பெனிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தற்போது வெறும் 4 கம்பெனிகள் மட்டுமே உள்ளன.

அரசு உதவ கோரிக்கை
பேனா நிப்பு தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘பேனா நிப்புத் தொழில் குடிசைத் தொழிலாக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறு தொழிலுக்கான மானிய கடன்களை வழங்குவதில்லை. நிப்புகளை கழுவி சுத்தம் செய்வதற்காக தேவைப்படும் மண்ணெண்ணெய் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதை ரேஷன் முறையில் குறைந்த விலையில் வழங்க அரசிடம் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை. பேபி மாடல், 2ம் நம்பர் நிப்பு, 3ம் நம்பர் நிப்பு, ஆர்ட் நிப்பு என பல விதமான வடிவங்களில் நிப்புகளை தயாரிக்கிறோம்.

சாத்தூரில் தயாரிக்கப்படும் நிப்புத் தொழிலுக்கு தற்போது மூச்சுக்காற்றாக இருப்பது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில வடமாநிலங்களும், நேபாளமும் ஆகும். இந்த மாநிலங்களில் மழை காலங்களில் பால் பாயிண்ட் பேனா மையானது உறைந்துவிடும் என்பதால் நிப்பு பேனாக்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சாத்தூரில் அழியும் நிலையில் உள்ள நிப்புத் தொழிலை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.