வரும் 9ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 6. இந்தாண்டு போட்டியாளர்களின் எண்ணிக்கை வழக்கமானதை விட அதிகம். மேலும் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் நிகழ்ச்சியைப் பார்க்க வழி செய்திருக்கிறார்கள்.
போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக் பாஸ் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு நேற்று முதல் க்வாரன்டீன் தொடங்கியது. பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சீசன் 6-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என 14 பேர் அடங்கிய முதல்கட்டப் பட்டியலை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அது குறித்த விவரங்களை கீழேயிருக்கும் இணைப்புகளில் பார்க்கலாம்.
சினிமா, சின்னத்திரைப் பிரபலங்களுடன் இந்த முறை பொது மக்களிலிருந்தும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே ஆயிரக்கணக்கானோர் ‘ஏன் கலந்து கொள்ள நினைக்கிறோம்’ என்பதை விளக்கி வீடியோ எடுத்து சேனலுக்கு அனுப்பி வைத்தார்களாம். அவற்றைப் பரிசீலித்து அவர்களிலிருந்தும் சிலர் தேர்வாகி இருக்கின்றனராம். அந்தப் பட்டியலும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதன்படி மாடல்கள் இருவர் மற்றும் திருநங்கை ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களைக் குறித்த விவரங்கள்…
சிவின் கணேசன்
இவர் ஒரு திருநங்கை. வீட்டுக்கு ஒரே பையனாக இருந்தவர். வீட்டில் இவரது உணர்வுக்கு, விருப்பத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. எனவே வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் அங்கிருந்து விட்டு மீண்டும் இந்தியா வந்தார். இவர் இங்குத் திரும்பி வந்ததை இவரது அம்மா விரும்பவில்லையாம். எனவே அம்மாவை இதுவரை சந்திக்கவே இல்லையாம். ஹெச்.சி.எல் நிறுவனத்திலும் சில ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார் இவர். பிக் பாஸ் போட்டியில் தான் பங்கேற்பதைப் பார்த்து இதுவரை பேசாத அம்மா, தன்னிடம் பேசுவார் என்று நம்புகிறார் இந்தப் போட்டியாளர்.
நிவாஷினி
சிங்கப்பூரைச் சேர்ந்த இவர் அங்குத் தொகுப்பாளராக இருக்கிறார். எப்போதும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை எனத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து போட்டியாளர்களை வரவழைப்பது பிக் பாஸின் வழக்கமே. அந்த வகையில் இந்த முறை இவர் சிங்கப்பூர் கோட்டாவில் வந்திருக்கிறார்.
நீது
இவர் ஒரு மாடல். சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்.